Friday, October 9, 2009
காதலுக்கு முன்(கா.மு)..... காதலுக்கு பின்(கா.பி).....
அன்றோ, பேசுவதற்கு நிறையுண்டு ,
கேட்பதற்கு என்னவள் என்று யாருமில்லை.
இன்றோ, கேட்பதற்கு என்னவளுண்டு ,
பேசுவதற்கு முடியவில்லை, அவசியமுமில்லை.
அன்றோ, காத்திருக்க நேரமுண்டு ,
காக்கவைக்க என்னவள் என்று யாருமில்லை.
இன்றோ, காக்கவைக்க என்னவளுண்டு,
காத்திருக்க முடியவில்லை, நேர்ந்தில்லை.
அன்றோ, கோபப்பட விருப்பமுண்டு,
ஊடல் செய்ய என்னவள் என்று யாருமில்லை.
இன்றோ, ஊடல் செய்ய என்னவளுண்டு,
கோபப்பட முடியவில்லை, விரும்பவுமில்லை.
அன்றோ, காதலிக்க ஆசையுண்டு
காதலிப்பார் யாருமில்லை.
இன்றோ, காதலிக்க கன்னியுண்டு,
தடைசெய்ய வேண்டியதில்லை, தேவையுமில்லை.
Tuesday, September 22, 2009
காதல் கோட்டை... தேடுதல் வேட்டை...
இல்லை. காலையில் உன்னுடன் மணலில் நடக்க தேடுகிறேன்.
என் கவிதை படிக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னையே படிக்க தேடுகிறேன்.
என்னை அடக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னுள் அடங்க தேடுகிறேன்.
என்னிடம் தோற்க்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னிடம் தோற்க்க தேடுகிறேன்.
என்னை மயக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னை மணக்க தேடுகிறேன்.
என் உடல் பசிக்கு தேடுகிறேனா உன்னை ?
இல்லை. என் ஆத்ம பசிக்கு தேடுகிறேன்.
சாலையில் செல்லும் பொழுதும் தேடுகிறேன்,
வேலை செய்யும் பொழுதும் தேடுகிறேன்,
என்று முடியுமோ இந்த தேடுதல் வேட்டை.
Saturday, June 6, 2009
கொள்ளி.. கொள்ளி..
முந்தி இருப்பச் செயல்.
சென்னையில் இருந்து மதுரைக்கு காரில் எங்கள் பயணம். கேலிக்கும், விளையாட்டுக்கும் மற்றும் சந்தோஷத்துக்கும் பஞ்சம் இல்லா பயணம். எங்கள் குழந்தைகளின் சின்னஞ்சிறு வழக்குகளைத் தீர்க்கும் நாட்டாமையான என் மனைவி , என் குழந்தைகளை உசுப்பேற்றி விட்டு அமைதியாய் வண்டி ஓட்டும் எனக்கு பேச்சுத் துணையாய் முன் இருக்கையில்.
எமன் எருமையில் வருவான் என்பார்கள், எங்களை கொண்டு செல்ல லாரியில் வந்தானோ என்னவோ? எங்கள் எதிராக அந்த லாரி அவ்வளவு வேகமாக வந்து கொண்டு இருந்தது. பின்னால் சைரன் அடித்து கொண்டு போலீஸ் வண்டியும். எமனைக் கண்ட நான் எப்படியோ வண்டியை மண்ணில் விட்டு ஒரு ஓரமாக நிறுத்தினேன். தாறுமாறாக வந்த அந்த எம வாகனமும் தடுப்பில் முட்டி நின்றது.
நாங்கள் எங்கள் வண்டி சாவியைத் தந்தோம். அதற்கு பிறகு போலீஸ் கான்ஸ்டபிள் ஒருத்தர் வண்டி சாவியைக் கொடுக்க எங்கள் அருகில் வந்தார். அவன் வாங்க சென்ற பொழுது, யாரும் எதிர்ப்பார்க்காதது நடந்தது. அவன் பிடியில் இருந்த என் மகன் திடிரென ரத்த வாந்தி எடுத்தான். நானும், என் மனைவி மட்டுமின்றி அந்த லாரி ஓட்டி வந்த அந்த நபரும்(அவன் திருடனாக இல்லை கொலைகாரனாக இல்லை தீவிரவாதியாக கூட இருக்கலாம்) நிலை குலைந்தோம். அந்த சந்தர்ப்பத்தில் எங்கிருந்து வந்த தைரியமோ என் மகனை அவன் கையில் இருந்து பிடுங்கினேன், போலீஸ் அந்த நபரைப் பிடித்தது.
நாங்கள் எங்கள் மகனை எடுத்துக்கொண்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு விரைந்தோம். அவர்கள் அவனை பரிசோத்தித்து விட்டு அவனுக்கு புற்றுநோய் உள்ளது என்றும், அதிகம் நேரம் அழுத காரணத்தால் இப்பொழுது ரத்த வாந்தி எடுத்துள்ளதாக கூறினர். எமன் போலீஸ் துரத்தி வந்த அந்த நபர் இல்லை நான் தான். என் மகன் எப்பொழுதும் அப்பா பிள்ளை. அவன் அம்மாவிடம் உள்ளதை விட என்னிடம் அதிக நேரம் செலவிடுவான். அதுவே அவனை இந்த நிலைமைக்குத் தள்ளி விட்டது.
நான் தொடர் புகைவண்டி(Chain Smoker) விடுவதில் திறமைசாலி. அந்த ப் புகையை நிறைய சுவாசித்ததால்(Passive Smoking) இப்பொழுது அவனுக்கு இந்த நிலைமை. நாங்கள் சென்னை திரும்பி வந்தோம். முன்பு அவன் சிரிப்பில் இறைவனைக் கண்ட நான், இப்பொழுது குற்ற உணர்வில் அவன் முகத்தை நேரே பார்க்க தைரியம் இன்றி கூனிக் குறுகி உள்ளேன். நான் என் வாயில் சிகரெட்டுக்குத் தினமும் வைத்த கொள்ளி என் மகனுக்கு நானே கொள்ளி போடக்கூடும் என்ற நிலைக்கு தள்ளிவிட்டதை எண்ணி தினம் சாகிறேன் அவனுடன் சேர்ந்து நானும்.
என் மகன் போல் இவ்வுலகில் எந்த ஒரு குழந்தையும் பாதிக்கப் பட கூடாது. புகைப்பிடிப்பவர்கள் புகைப் பிடிப்பதை நிறுத்த முடியா விட்டாலும், உங்கள் விட்டினுள் அல்லது புகைப் பிடிக்காத மற்றவர்களுடன் இருக்கும் பொழுது தயவு செய்து புகைப் பிடிக்காதீர்கள்.மற்றவர் துன்பத்திற்கு காரணகர்த்தா ஆகி விடாதீர்கள்.
'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
Saturday, May 9, 2009
அம்மா உன்னை வணங்குகிறேன்.
தாய்மொழி பேசத்தெரியாத தருணத்தில், நம் மழலை மொழி அறிந்தவள் அவளே. நடக்கத்தெரியாத தருணத்தில், நம்மை சுமந்து செல்லும் வாகனம் அவளே. எதுவும் தெரியாத தருணத்தில், நமக்கு கற்று கொடுக்கும் முதல் ஆசானும் அவளே. உறவே தெரியாத தருணத்தில், நம் உறவுகளை அறிமுக படுத்தும் முதல் உறவும் அவளே. நம் வாழ்க்கையின் ஆணி வேரும் அவளே. நம் விழியோரம் சிறு துளி நீர் வழிந்தால் அவள் நெஞ்சம் பொருத்ததில்லையே. அம்மா எனப்படுபவள் தியாகத்தின் திருவுருவம்.
அம்மா என்ற அந்த முன்று எழுத்து மந்திரம் தரும் சுகம் மற்ற எதனால் தர இயலும்? பாசப் பிணைப்புகளிலேயே மிக மிக வலுவான பிணைப்பு ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பிணைப்பாகும். நாம் நம் தாய்மேல் இருக்கும் பாசத்தைவிட, அவள் நம் மேல் வைத்திருக்கும் பாசம் பல மடங்கு அதிகமானது, பலமானது. அவள் எதை இழந்தாலும் தன் குழந்தைகளை மட்டும் இழக்கச் சம்மதிக்க மாட்டாள். நமக்கு குழந்தை பிறந்தாலும், நாம் எப்பொழுதும் அவளுக்கு குழந்தையே.
இன்னொரு ஜன்மம் என்று ஒன்று உனக்கு இருப்பின், அதில் நீ எனக்கு மகளாய் பிறக்க வேண்டும், நீ எனக்கு கொடுத்த, கொடுத்துக் கொண்டு இருக்கும், கொடுக்க போகும் அனைத்துக்கும் ஓரளவாவது திருப்பி தர வேண்டும் நான். இன்னொரு ஜன்மம் என்று ஒன்று எனக்கு இருப்பின், மீண்டும் உன் கருவறையில் உயிர் பெற வேண்டும். என் அன்னைப் போன்று இந்த உலகில் வாழும் அனைத்து அம்மாகளுக்கும் இந்த இடுகை சமர்ப்பணம்.
Tuesday, April 28, 2009
கருணாநிதி உண்ணாவிரதப் போராட்டமும் ஆதரவு அலையும்
தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்காக எழுதிய நண்பர்களே நீங்களே சற்று அமைதியாக கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். அவர் நினைத்து இருந்தால் எவளவோ செய்து இருக்க முடியும், மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றிருந்தால் இலங்கையில் போர் நிறுத்தம் எப்பொழுதோ நிச்சயமாக ஏற்பட்டிருக்கும். தி.மு.க ஆதரவு இல்லாமல் மத்திய அரசை காங்கிரஸ் கட்சியால் தொடர்ந்து இருக்க முடியுமா? இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேவையும் இருந்திருக்காது.
ஆனால் அவரோ தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல், மனிதசங்கிலி போராட்டம், மன்மோகன்சிங், சோனியாகாந்திக்கு தந்தி அனுப்புவது, கடிதம் எழுவது, பொது வேலை நிறுத்தம் என்று எத்தனை எத்தனை நாடகங்கள். அவர் நாடகங்கள் என்று எழுதியதை காட்டிலும் இந்த நாடகங்களின் எண்ணிக்கை அதிகம் என்று நினைக்கிறேன். கடைசி நாடகம், தவறு தற்போதிய நாடகம் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டமும்.
மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றிருந்தால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி இலங்கை போர்நிறுத்தம் கொண்டு வந்திருக்கும். ஒருவேளை காங்கிரஸ் கட்சி இங்கு தமிழகத்திலும் ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்றால், மீண்டும் தேர்தல் சந்தித்து பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி திரும்பவும் ஆட்சி கட்டில் ஏறி இருக்கலாம். கவிஞர் தாமரை கூறியது போல், அவர் மதிப்பு மக்கள் மனதில் உயர்ந்திருக்கும்.
எனினும் ஈழப் பிரச்னையை பொறுத்தவரை யார் அமாவாசை? என்று அவர் கூறியதில் எனக்கு உடன்பாடில்லை. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அவரின் இந்த நாடகங்களுக்கு நீங்கள் வரவேற்ப்பு தருவதா வேண்டாமா என்று?
Wednesday, April 22, 2009
பல்லவனில் இருந்து பல்லவிக்கு
எப்பொழுதும் பேருந்து நேரத்திற்கு சரியாக வரும் நான், இன்று அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்துள்ளேன். ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக தோன்றியது. இந்த பேருந்து நிறுத்தமும், நான் பயணிக்கக் காத்திருக்கும் பேருந்தும் என் வாழ்க்கை பயணத்தில் ஒன்றாகக் கலந்து விட்டன. என் வாழ்க்கைப் பாதையை அசை போட ஆரம்பித்தேன். நான் இன்று ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியன். என்னிடம் நேற்றைய பேருந்து பயணத்தின் போது தன் காதலை வெளிப்படுத்திய ஒரு பெண்ணிற்கு என் பதிலைச் சொல்ல வேண்டும்.
நான்கு வருடங்களுக்கு முன், நான் வேலை செய்யும் கல்லூரியில் தான் என் இளநிலை பட்டப்படிப்பின் கடைசி வருடம் படித்து வந்தேன். அப்பொழுதும் இதே பேருந்தில் தான் என் பயணம். என் உறவுக்காரத் தங்கையின் தோழி, எங்கள் கல்லூரி கவி, என் கனவுக்கன்னி, கல்பனாவும் இதே வண்டியில் தான் வருவாள். அவள் முதலாம் ஆண்டு படித்து வந்தாள். அவளைப் பார்க்கவே நானும் நாள் தவறாமல் வந்து விடுவேன்.
இதே பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, எங்கள் பயணத் தோழனாம் இந்தப் பேருந்தில் தான் தயங்கித் தயங்கி "எளிதில் தீப்பற்றும் பொருட்களை பேருந்தில் கொண்டு செல்ல தடை, ஆனால் உன்னை கண்ட உடன் பற்றிக்கொள்ளும் என் இதயத்தை நான் என்ன பண்ணுவது? உன்னை கல்லூரிக்கு பத்திரமாகக் கொண்டு விடும் பொறுப்பையே இந்த பேருந்து ஓட்டுனருக்கு நீ தந்தது போல் நான் கல்லறைக்கு செல்லும் வரை என்னை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையே உனக்கு தருக்கிறேன், ஏற்றுக் கொள்வாயா?", என்று அவளிடம் சொன்னேன். "என் வாழ்க்கை துணை தேர்ந்தெடுக்கும் பக்குவம் எனக்கு இப்ப இல்லை. படிப்பில் தான் தன் முழு கவனமும் இப்பொழுது" என்றாள். கொஞ்சம் நாகரிகமாக தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாள். இது அவள் மேல் இருந்த மதிப்பைக் கூட்டியது.
இதன் பின்னர் பல வழியில் நான் முயற்சித்தும் பயனில்லை. எனது மேற்படிப்பை முடித்து அதே கல்லூரியில் பேராசிரியர் ஆனேன். அப்பொழுது அவள் கடைசி வருடம் பயின்று வந்தாள். அவளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. என் வேலை கண்ணியம் கருதி, தேவையானதை மட்டும் உரையாடி வந்தேன். அதே பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இந்த ஆண்டு , எங்கள் பயணத் தோழனாம் இந்த பேருந்தில் அவள் தயங்கித் தயங்கி "பேருந்தில் நான் உங்கள் அருகே ஜன்னலோரம் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். வாழ்க்கை முழுவதும்? " என்று இலை மறை காயாக தன் காதலை என்னிடம் சொன்னாள்.
இந்த வார்த்தை மூன்று வருடங்களுக்கு முன் நீ சொல்லி இருக்க கூடாதா? எத்தனை நாட்கள் இதற்காக ஏங்கி இருப்பேன். காலம் தாழ்த்தி சொல்லி விட்டாயே? உடைந்த கண்ணாடியை சேர்க்கப் பார்க்கிறாய். ஆனால் என் புத்தியில் அவள் காதலை ஏற்றால், நான் செய்யும் பணிக்கு களங்கம் வருமே என்று ஒரு போராட்டம் உருவானது. கடைசியில் என் மனதை அடக்கி அவளிடம் என் நிலையை விளக்கி அவள் காதலை நிராகரித்தேன்.
இப்பொழுது என் விட்டில் எனக்கு ஒரு பெண் பார்த்துள்ளனர். ஆனால் நேற்று பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி, கல்பனா எங்கள் பேருந்தில் வந்தாள். "சென்ற வருடம், நான் என் காதலை கூறிய பொழுது பணியைக் காரணம் காட்டி வேண்டாம் என்றீர்கள், இப்பொழுது நான் உங்கள் மாணவி இல்லை, ஆகையால் நான் உங்கள் மனைவியாக எந்த தடையும் இல்லையே?" என்று கேட்டாள். "நன்றாக யோசித்து தான் நான் இந்த முடிவு எடுத்துள்ளேன். நீங்களும் சிந்தித்து நல்ல ஒரு முடிவை நாளை சொல்லுங்கள்" என்று கூறி விட்டு சென்றாள்.
அவள் எடுத்த முடிவில் உறுதியாக உள்ளதும், அவள் என் மீது கொண்ட காதலும், அவளின் மேல் நான் கொண்ட காதலை மேலும் கூட்டியது. ஆனால் என் பெற்றோர் பார்த்துள்ள பெண்ணிற்கு என்ன பதில் சொல்ல முடியும் என்று என் புத்தி. மீண்டும் என் மனதுக்கும், புத்திக்கும் போராட்டம் உருவானது. முடிவு எடுக்க முடியாமல் திணறினேன். எங்கள் பேருந்து தெருமுனையில் திரும்புவதைக் கண்டு சுதாகரித்தேன்.
எனக்காக வழி மீது விழி வைத்து அவள் காத்திருந்தாள். அவளிடம் சென்று இம்முறையும் என்னால் நம் காதலை உயிர்ப்பிக்க முடியாது என்று சொன்னேன். அவள் கண்களில் வழிந்த நீர் கடும் பாறையையும் உருகச் செய்யும். ஆனால் என் மனம் என்ற கல் பாறை உருகவில்லை எனென்றால் எப்பொழுதோ அதை அவளிடம் பண்டமாற்று செய்து விட்டேனே. அவள் பெற்றோர் மாப்பிளை பார்த்துள்ளத்தாக சொன்னாள். எல்லா காதலும் கல்யாணத்தில் முடிவதில்லையே என்று அவளை சமாதனம் செய்தேன்.
அன்று மாலை அதே பேருந்தில் என் பெற்றோர் பார்த்த பெண் வீட்டுக்குச் சென்றோம். எங்கள் இருவர் பெற்றோர் அளித்த காதல் பரிசு எங்கள் கல்யாண நிச்சயம் என்றும், என் காதலியின் குறும்பு விளையாட்டு தான் நேற்றும், இன்றும் நடைபெற்ற நாடகம் என்பதும் தெரிந்தது. நாங்களும் பரிசு அளித்தோம் அடுத்த வருடம் இதே பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி எங்கள் பெற்றோருக்கு எங்கள் பல்லவி( பல்லவன் திருத்தி பல்லவி என்று வைத்தோம்) மூலமாக.
பேருந்தை பற்றிய சில கவிதைகள்
------------------------------------------------------------------------
ஏழை பங்காளன் உற்ற தோழன் நீ...
சமுக விரோதிகளின் முதல் எதிரியும் நீ....
------------------------------------------------------------------------
உனக்குள் புகைப் பிடிக்க தடை...
சாலையில் புகைக் கக்க தடை இல்லை உனக்கு...
------------------------------------------------------------------------
மகளிர் மட்டும்... பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்...
------------------------------------------------------------------------
மக்களின் தரம் பார்க்காத உன்னை...
தரம் பிரித்து விட்டனர் அரசியல் வியாதிகள்...
------------------------------------------------------------------------
சங்கமம் - போட்டிக்காக
Friday, April 17, 2009
சங்கமம் - இது உங்களுக்கே நல்லா இருக்கா?
திங்கட்கிழமை பஸ் போட்டோ ஒன்னு போட்டு, "விவரம்: சித்திரை-2ம் நாள்
ஆவலுடன் காத்திருங்கள்" என்று அடுத்த பிட்டு போட்டிங்க... நானும் சித்திரை-2ம் நாள் இருந்த 10 நிமிசத்துக்கு ஒரு முறை போட்டி பக்கத்தை refresh பண்ணி பார்கிறேன், ஒன்னும் வரல :(
என்னைப் போன்ற சின்னப் பசங்களை இப்படி ஏமாற்றலாமா?.... அது தான் உங்கள் கேட்டரலாமனு இந்த இடுகையை பதிவு செய்துள்ளேன். இந்த தடவை நான் சரித்தரம் படைக்கணும் இல்ல... அது தான் கொஞ்சம் முந்திரிக் கொட்டை வேலை செய்துட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சுருங்க :).. சின்ன பையன் அறியாம செஞ்சுட்டேன். சீக்கிரம் விபரம் தாங்க... நானும் பிட்டு ரெடி பண்ணனும்.
Saturday, April 11, 2009
தேர்தலில் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி !!!!
எந்த தேர்தலைப் பற்றி பேசுகிறேன் என்று குழப்பமா? நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி இல்லை. நமது சங்கமம் வலைப்பதிவின் சார்பாக நடத்தப்பட்ட கல்லூரி என்ற தலைப்பின் கிழ் தங்கள் படைப்புகளை எழுதிய நம் வலைப்பதிவு சிங்ககள் மோதிக்கொண்ட தேர்தலைப் பற்றி சொல்கிறேன்.
இந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து சிங்ககளுக்கும் வாக்களித்த எல்லா வாக்காளப் பெருமக்களுக்கு என் முதர்க்கண் நன்றினை தெருவித்து கொள்கிறேன். இந்த தேர்தலில் நான் deposit கூட பெறவில்லை (இரண்டாம் சுற்றுக்கு கூட நான் தகுதி பெறவில்லை) என்பது வேறு விசியம். என்னுடைய படைப்பும் உங்களை கவர்ந்து அதற்கு நீங்கள் வாக்களித்து இருப்பின் என் நெஞ்சார்ந்த நன்றியினை உங்களுக்கு தெருவிக்க கடமை பட்டுள்ளேன்.
"இளங்கன்று பயம் அறியாது" என்று நான் போட்டி கட்டுரையில் கூறியதுப் போல், இந்த தோல்வியின் இருந்தும் நான் பாடம் கற்று கொண்டுள்ளேன் என்பதில் எனக்கு மிகவும் சந்தோசம். என்னைப் போன்ற இளங்கன்றுகளை ஊக்குவிக்க சங்கமம் வலைப்பதிவு மீண்டும் தயார் என்று அறிவித்துள்ளது மேலும் ஒரு பிரசாதம். "இது எல்லாம் நமக்கு புதுசா பாஸ்.... போங்க பாஸ்" என்று நாமும் அதற்கு தயாராகிவிட்டோம்.
இந்நேரத்தில் வெற்றிப்பெற்ற ”வெட்டிப்பயல்” பாலாஜி, சத்யராஜ் குமார் மற்றும் ”பினாத்தல்” சுரேஷ் அவர்களுக்கு என் சார்பாகவும், வாக்காளப் பெருமக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை பதிவுச் செய்க்கிறேன். அதேப் போல் வரும் நாடாளுமன்ற மன்ற தேர்தலிலும் அனைத்து நண்பர்களும் வாக்களித்து ஜனநாயகத்தை வெற்றிப் பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Monday, April 6, 2009
கல்வி வியாபாரத்துக்கு தடை !!!!! தேர்தல் சலுகை.
மாடல்ல மற்றை யவை.
அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வாக்காளர்களை திணறடிக்கின்றனர். இத்தகைய இலவச திட்டங்கள் நம் மக்களை மேலும் சோம்பேறிகளாக்கி, அவர்கள் மூளை மழுங்கச் செய்யும் அரசியல்வாதிகளின் அறிய கண்டுபிடிப்புகள் என்பது என் கருத்து . "என் ரத்தத்தின் ரத்தமே" என்ற படத்தில் பாக்யராஜ் ஒரு நாள் உதவி செய்ய அதை நம்பி அடுத்த நாள் வேலைக்கு போகாத ரிக்க்ஷாக்காரன் கதை தான் இது ஆகும்.
இப்படித் தேவையில்லாத டி.வி இலவசம், லேப்டாப் இலவசம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுக்கின்றனர் தவிர மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தேவையான கல்வியைப் பொதுவுடமை ஆக்குவதைப் பற்றி யாரும் வாய் திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள் இந்த அரசியல்வியாதிகள். காரணம், கல்வி வியாபாரம் செய்யபவர்களிடம் கமிசன் பெறுவது மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெரும்பாலான கல்வி வியாபாரத்தளங்கள் நம் அரசியல்வாதிகளால் தானே நடத்தப்படுகிறது?.
இப்பொழுது சொல்லுங்கள் சின்ன பிள்ளைகளுக்கு ப்ளே ஸ்கூல் ஆரம்பித்து கல்லூரி படிப்பு முடிக்கும் வரை பணம் கொட்டக் கூடிய தங்க முட்டை இடும் வாத்து அல்லவா இந்த கல்வி வியாபாரம். இதை வெட்ட இவர்களுக்கு மனம் வருமா? புதிதாக கட்சி ஆரம்பித்து உள்ள விஜயகாந்த் வரை அனைவரும் கல்வி நிறுவன அதிபர்கள் தானே.
"ஒருவனுக்கு மீனைப் பிடித்துக் கொடுத்தால் அவனுக்கு அன்று உணவு. ஆனால், அதே நபருக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் வாழ் நாள் பூராவும் உணவு அவன் உழைப்பில்." என்று ஒரு சீன பழமொழி உண்டு. ஆகவே "கல்வி பொதுவுடமை" என்ற கருத்து பளுப் பெற வேண்டும், "அனைவருக்கும் கல்வி('சர்வ சிக்ஷ அபியான்')" என்ற திட்டத்தை திருத்தி அனைவருக்கும் சமச்சீரான கல்வி ( அனைத்து கல்வி நிறுவனங்களில் ஒரே வகையான கல்வி தரம்) அமைய வேண்டும் என்ற எனது ஆசையை இங்கு பதிவு செய்கிறேன். புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கும் இந்த கல்வி வியாபாரம் தடை செய்யப்பட வேண்டும்.
Wednesday, March 11, 2009
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! நண்பனே!
கருவறையில் இருந்து கல்லறையை நோக்கிச் செல்லும் பயணம் தான் வாழ்க்கை. இதில் கல்லூரி நாட்கள் என்பது ஒரு பூந்தோட்டம். அது போல் நம்மில் 90 சதவீத மக்களின் அடுத்து பயணிக்கும் பாதையை நிர்ணயிக்கப் போவதும் இங்கு தான். உலகில் பிறந்த அனைவருக்கும் இந்தத் தோட்டத்தைக் கடக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆங்கில ஆண்டை கி.பி மற்றும் கி.மு என்று வகைப்பிரிப்பது போல், நம்மில் பெரும்பாலோரின் வாழ்கையை கல்லூரி வாழ்க்கைக்கு முன் ( க.மு) மற்றும் கல்லூரி வாழ்க்கைக்குப் பின் ( க.பி) என்று வகைப்படுத்தலாம்.
எத்தனை ஊடல்கள், கூடல்கள். இதுபோல் ஒன்றா, இரண்டா நிகழ்ச்சிகளை, எல்லாம் சொல்லவே ஒரு வாரம் போதுமா?
வறுமையின் பிடியிருந்து மீள முயலும் என் எண்ணற்ற சகோதர, சகோதிரிகளின் ஆசையில் மண்னை அள்ளி போடுக்கின்றனர் இன்றைய கல்வி விற்கும் வியாபாரிகள். காமராஜர் கண்ட கனவு பலிக்காதா?. மற்ற வளர்ந்த நாடுக்களில் உள்ளது போல் நமது நாட்டின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்படாதா? கல்விதான் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றும் என்று அரசியல்வாதிகள் கூறினால் மட்டும் போதாது, நடைமுறைப் படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்கள் அரசியல்வியாதிகள் தான். இந்த கல்வி வியாபாரத்திற்கு முற்றுபுள்ளி வைக்கும் நாள் கூடிய விரைவில் வர வேண்டும். அனைவருக்கும் இந்த தோட்டத்தைக் கடக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். இதற்கு நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோமாக. இந்த நேரத்தில் நான் இந்த பூந்தோட்டத்தைக் கடக்க காரணமான என் தாய் மாமாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை இப்பதிவின் முலம் சமர்ப்பிக்கிறேன்.
சங்கமம் - போட்டிக்காக
Thursday, March 5, 2009
ஏ தமிழா! தீயாயிரு.... தீக்கிரையாகாதே!.... சிந்திப்பீர், செயல்படுவீர்.
சுவரின்றிச் சித்திரமேது நண்பா!
நண்பர்களே, என் உறவுகளே, இலங்கை வாழ் நம் சொந்தங்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் கண்டு நாம் அனைவரும் மீளா துயரத்தில் ஆழ்ந்து உள்ளோம். ஈழத்தமிழர்களைக் காக்க நெருப்பில் தங்களை கருக்கிக் கொண்டனர் பலர். தமிழகம் மட்டுமல்லாமல் ஜெனிவா, மலேசியா என்று உலகம் எங்கும் இது தொடர்கிறது. தயவுச்செய்து இனி எவரும் உங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்ட இவ்வழியை தேர்ந்தேடுக்காதீர். உங்கள் உயிர் தியாகத்தால் ஏற்பட்ட நன்மைகள் தான் என்ன?
1). உங்கள் குடும்பத்தினர் உங்கள் இழப்பால் இடிந்து போகின்றனர். 2). உங்கள் குழந்தைகள் தங்கள் மீது அன்பு செலுத்த, பாசத்துடன் ஆதரவு தர இருந்த ஆத்மாவை இனி அவர்கள் வாழ்க்கையில் இல்லாமல் செய்து, நீங்களே அவர்களை வஞ்சிக்கிறீர்கள். 3). உங்கள் துணைவியை தனி மரமாக்கி, உங்கள் குழந்தைகளை முன்னேற்ற பிறர் உதவியை எதிர்ப்பார்க்க செய்க்கிறீர்கள். 4). உங்கள் பெற்றோர் கடைசிக் காலத்தில் தம்மைக் கவனித்து கொள்வான் என்ற நம்பிக்கையை குழித் தோண்டி புதைப்பது மட்டுமல்லாமல் அவர்களின் மீதம் உள்ள வாழ்க்கையை நரகமாக்கி விடுக்கிறீர்கள். 5). உங்கள் இறப்பால் இலங்கை பிரச்சனையில் தீர்வு ஏற்ப்பட்டதா ? 6). இவை அனைத்துக்கும் மேலாக உங்கள் தியாகம் அரசியலாக்க படுக்கின்றது.
நம் சொந்தங்களின் உயிரை இலங்கைப் போர் என்ற தீக்கு இரையாவதை தடுக்க நாம் முயற்சிக்கிறோம், அந்த காட்டுத்தீயை எதிர்த்து இங்கு உள்ள நம் சொந்தங்கள் தீயில் தம்மைத்தாமே கருக்கிக் கொள்வது எவ்வகையில் நியாயம்? அங்கு உள்ள நம் சொந்தங்கள் யாரும் இதை உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்க வில்லை, எதிர்ப்பர்க்கவும் மாட்டார்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம். .
நம்மில் பலர் இதுபோன்றச் செயல்களில், இன்னும் தங்களை கருக்கிக் கொள்ள முற்படுக்கின்றனர். உங்கள் தியாக எண்ணத்தில் நான் தவறு கண்டுபிடிக்கவில்லை. ஆனால் உங்கள் போராட்ட வழியை தான் மாற்றம் வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றோம். "ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப்பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்" என்பது நமது முன்னோர் வாக்கு. நீங்கள் இன்னுயிர் துறப்பதால் நம் தமிழினத்தையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைத்து செயல்படும் கூட்டத்திற்கு மட்டுமே ஆனந்தம்.
நமது கையில் காயம் ஏற்பட்டால், அதற்க்காக ஒரு கத்தியை எடுத்து நம் கையை அறுத்து கொள்கிறோமா என்ன? வாழ்க்கை என்பது போர்க்களம், அதில் போராடி ஜெயிப்பதே வாழ்க்கையின் நோக்கம். எப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலைகளிலும் தெளிந்த நீர் ஓடை போல் உங்கள் மனம் செயலாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.
நீங்கள் ஒரு நிமிடத்தில் செய்யும் இந்த காரியத்திற்க்கு தாங்கள் பொறுப்பில்லை என்று இந்த அரசாங்கம் இரண்டே வார்த்தையில் சிறிதும் இரக்கம் இல்லாமல் முடித்து விடும். இதுவே நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும் பட்ச்சத்தில் உங்கள் உயிர்க்கு இந்த அரசாங்கம் தான் பொறுப்பு. உங்களை ஒருவேளை இந்த மண்ணுக்கு இரையாக விட்டால் அதன் பிறகு அவர்கள் ஒரு நாளும் இந்த நாட்டை ஆட்சி செய்ய கனவுக்கூட காண முடியாது. இதை போன்று பல்வேறு போராட்ட வழி உள்ளது என்பதற்க்காக இது ஒரு எடுத்துக்காட்டே ஆகும்.
எங்காவது தலைவர்கள் தீக்குளித்து பார்த்து இருக்கிறார்களா?. நீ தொண்டனாக இருந்து உன் தலைவனுக்கு தொண்டாற்றியது போதும், விழித்திடு தலைவனாக மாறி உன் மக்களுக்கு தொண்டாற்று. இந்த அரசாங்கத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் துருப்புச்சிட்டு நமது கையில் உள்ளது. தமிழராகிய நாம் சாதிக்க பிறந்தவர்களே தவிர, சாவதற்கு பிறந்தவர்கள் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். "நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும் ஜன்னல்கள் வழிகாட்டும்" என்பது பழமொழி. இந்த நம்பிக்கையுடன் போராடும் நம் இலங்கை வாழ் தமிழர்க்கு உன் தோழைக் கொடு, உன் உயிரை அல்ல.
Friday, February 27, 2009
காஷ்மீர் ஆயுதப்போராட்டமும், இலங்கைப் போரும் வேறுபட்டதா?
இலங்கையில் அந்நாட்டு அரசு போர் நிறுத்தம் செய்யாமல், தொடர்ந்து தாக்குதல் நடத்துவதைப் பற்றி நம் இந்திய மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முதல் சாதரண பொதுமக்கள் வரை இரண்டு வகையானக் கருத்துக்கள் நிலவுகிறது. சிலர் வரவேற்றும், சிலர் எதுர்த்தும் குரல் கொடுக்கின்றனர். அதில் இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கை தவறில்லை என்பது மட்டுமின்றி, காஷ்மீர் தனிநாடு கேட்டு போராடுபவர்களை எதிர்த்து நமது இராணுவம் போராடுவதை போல், இலங்கை ராணுவமும் போரிடுகிறது என்று கூறுபவர்களுடைய கருத்தில் உள்ள நியாய, அநியாங்களைப் பற்றி நாம் இப்பொழுது அலசி ஆராய்வோம்.
காஷ்மீர் தனிநாடு கேட்டு ஆயுதம் ஏந்தியவர்களை நம் அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்குவது தவறா?. நூற்றுக்கு நூறு இதில் தவறு ஏதும் இல்லை என்று தீவிரவாதிகள் மூலம் மூளைச்சலவைச் செய்யப்படாத எந்த ஒரு இந்திய குடிமகனின் பதிலாக மட்டுமின்றி இந்த உலகில் வாழும் நல்ல இதயம் படைத்த மக்களின் கருத்தாக இருக்கும். இதேப் போன்ற ஒரு அணுகுமுறையை தானே இலங்கை அரசும் மேற்கொள்கிறது. இதை நாங்கள் ஆதரிப்பது தவறா?. இது தான் அவர்கள் கேள்வி.
இலங்கைப் போர் என்ற இந்த விதை இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுதே விதைக்கப்பட்டது. இலங்கை சொந்தமண்ணாக கொண்ட தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது, தனிச் சிங்களச் சட்டம்(தற்ப்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), பெளத்தம் அரச சமயம் ஆக முதன்மைப்படுத்தப்படல் போன்ற பல்வேறு இனப்பாகுபாட்டினை தூண்டும் செயல்கள், அந்த விதை இன்று ஆலமரமாக எழும்ப காரணமாகி விட்டன.
காஷ்மீர் போராட்டமும் இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுதே ஆரம்பித்தது தான் என்றாலும், இந்தியா அங்கு அமைதி ஏற்படுத்தி, மக்கள் வாழ்க்கைத் தரம் முன்னேற பல முயற்ச்சிகள் மேற்கொண்டு உள்ளது. அங்கு மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் தீய சக்திகளை எதிராக இந்தியா போராடி வருகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் 370ஆம் பிரிவின்படி, ஜம்மு-காஷ்மீருக்குத் தன்னாட்சி உரிமையும் சிறப்பு அந்தஸ்தும் வழங்கப்பட்டன. 2007ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி பிரான்சில் நடைப்பெற்ற ஐரோப்பிய மக்கள் பிரதிநிதிகள் சபை கூட்டத்தில், அதன் பிரிட்டிஷ் பிரதிநிதியான எம்மா நிக்கல்சன் காஷ்மிரின் இரு பகுதிகளிலும் (பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்ப்பட)சுற்றுப்பயணம் மேற்கொண்டு தாக்கல் செய்திருந்த அறிக்கை பெருவாரியான பிரதிநிதிகளின் ஆதரவுடன் நிறைவேற்றியது.அதில் உள்ள சில முக்கிய கருத்துகள் இதோ "பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளதை விட அனைத்து விதங்களிலும் இந்திய காஷ்மீரில் மனித உரிமைகளும், மக்கள் வாழ்க்கை தரமும் அவர்களுக்கு அளிக்கப்படும் அடிப்படை உரிமைகளும் நன்றாக உள்ளது. பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமைகளே இல்லை.அவர்கள் சமமான குடிமக்களாக நடத்தப்படுவதில்லை. ஜனநாயகமும் இல்லை. பாகிஸ்தானிய பாராளுமன்றத்தில் அவர்களுக்கு பிரதிநிதித்துவமும் இல்லை."
இலங்கையில் மக்கள் சம உரிமைக் கோரி அறவழியில் போராடிய போது அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு அறப்போராட்டத்தை ஒடுக்கியது. அதில் பலியானோர் எண்ணிக்கை பல்லாயிரம். தங்கள் சுயமரியாதை பாதிக்கப்பட்டு, எண்ணற்ற தங்கள் சொந்தங்கள் இறப்பதைக் கண்டு ஆயுதம் ஏந்தி போராட ஆரம்பித்தனர். அவர்களை ஒடுக்குவதாகக் கூறி விமானப்படைத் தாக்குதல் சிங்கள ராணுவத்தினர் நடத்தினர், நடத்திக் கொண்டும் இருக்கின்றனர். இதில் அங்கு வாழும் அப்பாவி மக்கள் பெருமளவில் மடிவார்கள் என்று இவர்களுக்கு தெரியாதா? அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு மண்டல பகுதியில் தங்கியிருந்த அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் தொடர்ந்து சரமாரியாக பீரங்கி மற்றும் ஏவுகனை தாக்குதல் நடத்தியது எவ்வகையில் சரி? யுத்தத்தில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை நியதிகளைக் கூட காற்றில் பறக்க விட்டு, மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், சிறார் இல்லங்கள், குடியிருப்புகள் என குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்தியா, காஷ்மீரில் தீவிரவாதிகளை அடக்குவதாகக் கூறி என்றைக்கும் விமானப்படைத் தாக்குதல் நடத்தியது இல்லை.
மேலே குறிப்பிட்டதுப் போல், நமது இந்திய அரசு தீவிரவாதத்தைய இரும்புக்கரம் கொண்டு அடக்க முனைவது உண்மை எனினும், நம் நாட்டில் எவரையும் இன ரீதியாக ஒடுக்க தற்சமயம் இந்தியாவை ஆண்ட எந்த அரசும் முனையவில்லை. இதற்கு சான்றாக நமது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் 2008 அக்டோபர் 13ஆம் தேதி புதுடில்லியில் நடைப்பெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் பேசியதின் சில கருத்துகள் இதோ "மதத்தின் பெயரில் கலவரங்களை, வன்முறைகளை தூண்டி விடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதேநேரத்தில் இரு தரப்புக்கும் இடையே நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். இதில் சமரசத்துக்கே இடமில்லை. அதேநேரத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தவறான முறைகளைப் பின்பற்றக் கூடாது. குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிரான நடவடிக்கையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான எண்ணத்தையோ ஏற்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது" என்றார்.
இவை அனைத்துக்கும் மேலாக இந்தியாவில் வாழும் நாம் அனைவரும் காஷ்மீர் மக்களை நம்மில் ஒருவராக தான் பார்க்கின்றோம். ஆனால் இலங்கை வாழும் தமிழர்களை பிறநாட்டைய சேர்ந்தவர்களைப் போல் பாவிக்கின்றனர். சிலர் அவர்களை மனிதர்களாகக் கூட மதிப்பது இல்லை.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சரியாகாது என்பது தான் நம் அனைவருடைய கருத்தும். அரசியல் தீர்வு மட்டுமே இலங்கை வாழ் தமிழ் மக்களின் உயிரையும், உரிமையும் பாதுக்காக்க முடியும். இலங்கையில் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை, சம வாய்ப்பு என்ற நமது ஆசை வெறும் பகல்கனவாக இருந்துவிடாமல் நிறைவேறி அங்கு கூடியவிரைவில் அமைதி திரும்ப நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோமாக.
கடந்த தேர்தலை விட மக்கள் கணிசமான அளவில் வாக்களித்து காஷ்மீரில் புதிதாக அமைந்துள்ள அரசு, இந்தியாவின் பிறப்பகுதிகளில் உள்ளது போலான வாழ்கை முறையினை அங்கு கொண்டு வரவேண்டும். அதற்கு தேவையான அடிப்படை வசதி, வேலைவாய்ப்பு, கல்வி முதலியப்பற்றில் கவனம் செலுத்தி, ஊரடங்கு உத்தரவு, குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி வளைத்துத் தாக்குவது, சோதனைச் சாவடிகள் போன்றவற்றை குறைத்து, ''ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்'' முழுமையாக நீக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ வைக்க வேண்டும். இதன் முலம் காஷ்மீர் மக்களின் நம்பிக்கைப் பெற்று, அவர்களை உணர்வுபூர்வமாக தீவிரவாதிகளை எதிர்க்க வைத்தால் மட்டுமே, நாட்டின் மத நல்லிணக்கம், ஒருமைப்பாடு மற்றும் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத அமைப்புகளை முழுமையாக ஒடுக்க இயலும்.
காஷ்மீர் ஆயுதப்போராட்டமும், இலங்கைப் போரும் வேறுபட்டதா? என்ற கேள்விக்கான விடையை இப்பொழுது நீங்களே இந்த இடுகையின் பின்னோட்டத்தில் கூறுங்கள்.
Saturday, February 21, 2009
மத்திய அரசுக்கு ஒரு யோசனை - இலங்கை பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய இயலும்?
இலங்கை அரசுக்கு ராணுவ உதவி வழங்கும் நாடுகளில் முதல் இடம் யார் பெறுவார்கள்? நாம் தானே. உதவிச் செய்ய என்ன காரணம் கூறுகிறோம்?. அந்த ராஜதந்திரக் காரணம் என்னவாக இருந்தாலும் சரி, அதை நாம் சிறிது புறம் தள்ளிவிட்டு இக்கனத்தில் இருந்தாவது ராணுவ உதவி வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். எங்கள் வரிப்பணத்தால் எந்த ஒரு அப்பாவி உயிரும் இனியாவது பலியாகாமல் காத்திடுங்கள்.
போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்த இலங்கை அரசை வலியுறத்த வேண்டும். அதை இலங்கை அரசு நிறைவேற்றாதப் பச்சத்தில் பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையை உடனடியாக கூட்ட முயற்சிக்க வேண்டும். அனைத்து நாடுகளையும் மேற்குறிய இரண்டுச் செயல்களையும் செய்ய வலியுறத்த வேண்டும்.
நான் எதுவும் புதிதாக கூறவில்லை, என்னை போன்ற கோடிக்கணக்கான மக்களின் கருத்து தான் இவை அனைத்தும். இவை தமிழக மக்களின் எண்ணம் மட்டும் அல்ல. இந்தியராக பிறந்த அனைவருடையதும். ஏனெனில் நாங்கள் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் தாரக மந்திரத்தில் நம்பிகை உள்ளவர்கள். இந்திய நாட்டில் வாழும் சாதரண குடிமக்களாகிய எங்களுக்கே இவை தெரிகிறது என்றால் இந்த நாட்டை ஆளும் உங்களுக்கு தெரியாமலா இருக்கும். தயவு செய்து மீதம் உள்ள எம் மக்களையாவது காப்பாற்றுங்கள்.
Sunday, February 15, 2009
எம் மக்களை உயிரோடு விடுங்கள் - உலக தலைவர்களுக்கு பகிரங்க கோரிக்கை
இலங்கை உள்நாட்டுப் போரால் தினமும் இலங்கை ராணுவத்தினரும், விடுதலைப்புலிகள் மட்டுமல்ல பல நூறு அப்பாவி மக்களும் உயிரிழக்கின்றனர் . விடுதலைப்புலிகள் ஆதரவு, எதிர்ப்பு என்பதற்கு அப்பால் இலங்கையில் வாடும் அப்பாவி மக்களைப் பற்றி இவ்வுலகம் சிந்திக்க வேண்டும் என்பது தான் என் கோரிக்கை.
ராஜீவ் காந்தியை படுகொலை செய்தனர் என்று விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டு உள்ளது. நன்று, அதில் சம்மந்தப்பட்டவர்களை கண்டுப்பிடித்து தண்டனையை தாருங்கள், வேண்டாம் என்று நான் ஒருபொழுதும் சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்றும் அறியாத மக்கள் செத்து மடிவதற்கு காரணமான இப்போரை நிறுத்த இந்தியா மட்டும் அல்லாமல் அனைத்து உலக நாடுகளும் தீவிரமாக ஏன் முனையவில்லை என்பது தான் என் ஆதங்கம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்ட நளினியின் தண்டனையை குறைக்க திருமதி.சோனியா காந்தி அவர்கள் பரிந்துரை செய்தது கருணையின் வெளிப்பாற்றுக்கு சிறந்த எடுத்துகாட்டு. அதே போன்ற ஒரு கருணையை மீண்டும் ஒரு முறை அவர்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறோம்.அனைத்து கட்சி தமிழக தலைவர்கள் மட்டுமின்றி இந்திய தலைவர்களுக்கும் கோரிக்கை வைக்கின்றோம், உங்கள் அரசியல் லாப நஷ்ட கணக்குகளை சிறிது புறம் தள்ளிவிட்டு ஒரு அணியில் திரண்டு மீதமுள்ள எம் சகோதர மக்களின் உயிரையாவது காக்க குரல் கொடுப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் ஆவணம் செய்ய வேண்டும்.
இதில் இந்தியா உட்ப்பட உலக நாடுகள் என்ன செய்ய இயலும் என்று அடுத்த கேள்வி எழலாம்?. இப்போர் நடைபெற முக்கிய காரணம் என்ன என்று அலசினோம் என்றால் நமக்கு கிடைக்கும் ஒரே பதில் இனபாகுபாடு மற்றும் அதை மெருகூட்டும் இனப்பாகுபாட்டு சட்டங்களும் தான். எனவெ இது போன்று நடைபெறாமல் தடுத்து, நடைபெற்றதால் ஏற்பட்ட இன்னல்களைப் போக்கி இலங்கையில் அமைதி திரும்ப வழி செய்ய வேண்டும். உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படுத்தி மீதம் இருக்கும் எம் மக்களையாவது காக்க வேண்டும் என்று இவ்வுலக தலைவர்களை இரு கரம் குப்பி கேட்டுக் கொள்கிறேன்.
உங்களால் முடியும் துணிந்து முயற்சி செய்யுங்கள் உலக மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்பர். வாழ்க உலக சமுதாயம். வளர்க உலக அமைதி.