Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, April 28, 2009

கருணாநிதி உண்ணாவிரதப் போராட்டமும் ஆதரவு அலையும்


இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழினத் தலைவராம், முத்தமிழ் அறிஞர், வாழும் வள்ளுவர், தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி நேற்று காலை திடீரென உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் இறங்கினார். வயதான காலத்தில் உண்ணாநோன்பிருந்து தமிழர்களுக்காக கஷ்டப்படுகிறார், நெடுங்காலமாக ஈழத்தமிழர் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஒரே தலைவர், காங்கிரஸை மிரட்டிப் பணிய வைத்தார் என்று நமது வலைதள உலகத்தில் ஆதரவு அலை விசியது. எதிர்ப்பு அலைக்கு எதிராக பார்பானியத்தை எதிர்த்த கோபம்தான் கலைஞரை திரும்பிய பக்கம் எல்லாம் தாக்குகின்றது என்றும் எழுதினார்கள்.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்காக எழுதிய நண்பர்களே நீங்களே சற்று அமைதியாக கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். அவர் நினைத்து இருந்தால் எவளவோ செய்து இருக்க முடியும், மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றிருந்தால் இலங்கையில் போர் நிறுத்தம் எப்பொழுதோ நிச்சயமாக ஏற்பட்டிருக்கும். தி.மு.க ஆதரவு இல்லாமல் மத்திய அரசை காங்கிரஸ் கட்சியால் தொடர்ந்து இருக்க முடியுமா? இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேவையும் இருந்திருக்காது.

ஆனால் அவரோ தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல், மனிதசங்கிலி போராட்டம், மன்மோகன்சிங், சோனியாகாந்திக்கு தந்தி அனுப்புவது, கடிதம் எழுவது, பொது வேலை நிறுத்தம் என்று எத்தனை எத்தனை நாடகங்கள். அவர் நாடகங்கள் என்று எழுதியதை காட்டிலும் இந்த நாடகங்களின் எண்ணிக்கை அதிகம் என்று நினைக்கிறேன். கடைசி நாடகம், தவறு தற்போதிய நாடகம் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டமும்.

மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றிருந்தால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி இலங்கை போர்நிறுத்தம் கொண்டு வந்திருக்கும். ஒருவேளை காங்கிரஸ் கட்சி இங்கு தமிழகத்திலும் ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்றால், மீண்டும் தேர்தல் சந்தித்து பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி திரும்பவும் ஆட்சி கட்டில் ஏறி இருக்கலாம். கவிஞர் தாமரை கூறியது போல், அவர் மதிப்பு மக்கள் மனதில் உயர்ந்திருக்கும்.

எனினும்
ஈழப் பிரச்னையை பொறுத்தவரை யார் அமாவாசை? என்று அவர் கூறியதில் எனக்கு உடன்பாடில்லை. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அவரின் இந்த நாடகங்களுக்கு நீங்கள் வரவேற்ப்பு தருவதா வேண்டாமா என்று?

Monday, April 6, 2009

கல்வி வியாபாரத்துக்கு தடை !!!!! தேர்தல் சலுகை.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

"ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், மற்றது அனைத்தும்(பணம், புகழ்....) காலத்தால் அழியக் கூடியது " என்பது நமது வள்ளுவர் சொன்னது.

அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வாக்காளர்களை திணறடிக்கின்றனர். இத்தகைய இலவச திட்டங்கள் நம் மக்களை மேலும் சோம்பேறிகளாக்கி, அவர்கள் மூளை மழுங்கச் செய்யும் அரசியல்வாதிகளின் அறிய கண்டுபிடிப்புகள் என்பது என் கருத்து . "என் ரத்தத்தின் ரத்தமே" என்ற படத்தில் பாக்யராஜ் ஒரு நாள் உதவி செய்ய அதை நம்பி அடுத்த நாள் வேலைக்கு போகாத ரிக்க்ஷாக்காரன் கதை தான் இது ஆகும்.

இப்படித் தேவையில்லாத டி.வி இலவசம், லேப்டாப் இலவசம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுக்கின்றனர் தவிர மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தேவையான கல்வியைப் பொதுவுடமை ஆக்குவதைப் பற்றி யாரும் வாய் திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள் இந்த அரசியல்வியாதிகள். காரணம், கல்வி வியாபாரம் செய்யபவர்களிடம் கமிசன் பெறுவது மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெரும்பாலான கல்வி வியாபாரத்தளங்கள் நம் அரசியல்வாதிகளால் தானே நடத்தப்படுகிறது?.

இப்பொழுது சொல்லுங்கள் சின்ன பிள்ளைகளுக்கு ப்ளே ஸ்கூல் ஆரம்பித்து கல்லூரி படிப்பு முடிக்கும் வரை பணம் கொட்டக் கூடிய தங்க முட்டை இடும் வாத்து அல்லவா இந்த கல்வி வியாபாரம். இதை வெட்ட இவர்களுக்கு மனம் வருமா? புதிதாக கட்சி ஆரம்பித்து உள்ள விஜயகாந்த் வரை அனைவரும் கல்வி நிறுவன அதிபர்கள் தானே.

"ஒருவ‌னுக்கு மீனைப் பிடித்துக் கொடுத்தால் அவ‌னுக்கு அன்று உணவு. ஆனால், அதே ந‌ப‌ருக்கு மீன் பிடிக்க‌க் க‌ற்றுக்கொடுத்தால் வாழ் நாள் பூராவும் உண‌வு அவன் உழைப்பில்." என்று ஒரு சீன‌ ப‌ழ‌மொழி உண்டு. ஆகவே "கல்வி பொதுவுடமை" என்ற கருத்து பளுப் பெற வேண்டும், "அனைவருக்கும் கல்வி('சர்வ சிக்ஷ அபியான்')" என்ற திட்டத்தை திருத்தி அனைவருக்கும் சமச்சீரான கல்வி ( அனைத்து கல்வி நிறுவனங்களில் ஒரே வகையான கல்வி தரம்) அமைய வேண்டும் என்ற எனது ஆசையை இங்கு பதிவு செய்கிறேன். புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கும் இந்த கல்வி வியாபாரம் தடை செய்யப்பட வேண்டும்.

Thursday, March 5, 2009

ஏ தமிழா! தீயாயிரு.... தீக்கிரையாகாதே!.... சிந்திப்பீர், செயல்படுவீர்.


சுவரின்றிச் சித்திரமேது நண்பா!


நண்பர்களே, என் உறவுகளே, இலங்கை வாழ் நம் சொந்தங்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் கண்டு நாம் அனைவரும் மீளா துயரத்தில் ஆழ்ந்து உள்ளோம். ஈழத்தமிழர்களைக் காக்க நெருப்பில் தங்களை கருக்கிக் கொண்டனர் பலர். தமிழகம் மட்டுமல்லாமல் ஜெனிவா, மலேசியா என்று உலகம் எங்கும் இது தொடர்கிறது. தயவுச்செய்து இனி எவரும் உங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்ட இவ்வழியை தேர்ந்தேடுக்காதீர். உங்கள் உயிர் தியாகத்தால் ஏற்பட்ட நன்மைகள் தான் என்ன?


1). உங்கள் குடும்பத்தினர் உங்கள் இழப்பால் இடிந்து போகின்றனர். 2). உங்கள் குழந்தைகள் தங்கள் மீது அன்பு செலுத்த, பாசத்துடன் ஆதரவு தர இருந்த ஆத்மாவை இனி அவர்கள் வாழ்க்கையில் இல்லாமல் செய்து, நீங்களே அவர்களை வஞ்சிக்கிறீர்கள். 3). உங்கள் துணைவியை தனி மரமாக்கி, உங்கள் குழந்தைகளை முன்னேற்ற பிறர் உதவியை எதிர்ப்பார்க்க செய்க்கிறீர்கள். 4). உங்கள் பெற்றோர் கடைசிக் காலத்தில் தம்மைக் கவனித்து கொள்வான் என்ற நம்பிக்கையை குழித் தோண்டி புதைப்பது மட்டுமல்லாமல் அவர்களின் மீதம் உள்ள வாழ்க்கையை நரகமாக்கி விடுக்கிறீர்கள். 5). உங்கள் இறப்பால் இலங்கை பிரச்சனையில் தீர்வு ஏற்ப்பட்டதா ? 6). இவை அனைத்துக்கும் மேலாக உங்கள் தியாகம் அரசியலாக்க படுக்கின்றது.


நம் சொந்தங்களின் உயிரை இலங்கைப் போர் என்ற தீக்கு இரையாவதை தடுக்க நாம் முயற்சிக்கிறோம், அந்த காட்டுத்தீயை எதிர்த்து இங்கு உள்ள நம் சொந்தங்கள் தீயில் தம்மைத்தாமே கருக்கிக் கொள்வது எவ்வகையில் நியாயம்? அங்கு உள்ள நம் சொந்தங்கள் யாரும் இதை உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்க வில்லை, எதிர்ப்பர்க்கவும் மாட்டார்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம். .


நம்மில் பலர் இதுபோன்றச் செயல்களில், இன்னும் தங்களை கருக்கிக் கொள்ள முற்படுக்கின்றனர். உங்கள் தியாக எண்ணத்தில் நான் தவறு கண்டுபிடிக்கவில்லை. ஆனால் உங்கள் போராட்ட வழியை தான் மாற்றம் வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றோம். "ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப்பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்" என்பது நமது முன்னோர் வாக்கு. நீங்கள் இன்னுயிர் துறப்பதால் நம் தமிழினத்தையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைத்து செயல்படும் கூட்டத்திற்கு மட்டுமே ஆனந்தம்.


நமது கையில் காயம் ஏற்பட்டால், அதற்க்காக ஒரு கத்தியை எடுத்து நம் கையை அறுத்து கொள்கிறோமா என்ன? வாழ்க்கை என்பது போர்க்களம், அதில் போராடி ஜெயிப்பதே வாழ்க்கையின் நோக்கம். எப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலைகளிலும் தெளிந்த நீர் ஓடை போல் உங்கள் மனம் செயலாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.


நீங்கள் ஒரு நிமிடத்தில் செய்யும் இந்த காரியத்திற்க்கு தாங்கள் பொறுப்பில்லை என்று இந்த அரசாங்கம் இரண்டே வார்த்தையில் சிறிதும் இரக்கம் இல்லாமல் முடித்து விடும். இதுவே நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும் பட்ச்சத்தில் உங்கள் உயிர்க்கு இந்த அரசாங்கம் தான் பொறுப்பு. உங்களை ஒருவேளை இந்த மண்ணுக்கு இரையாக விட்டால் அதன் பிறகு அவர்கள் ஒரு நாளும் இந்த நாட்டை ஆட்சி செய்ய கனவுக்கூட காண முடியாது. இதை போன்று பல்வேறு போராட்ட வழி உள்ளது என்பதற்க்காக இது ஒரு எடுத்துக்காட்டே ஆகும்.


எங்காவது தலைவர்கள் தீக்குளித்து பார்த்து இருக்கிறார்களா?. நீ தொண்டனாக இருந்து உன் தலைவனுக்கு தொண்டாற்றியது போதும், விழித்திடு தலைவனாக மாறி உன் மக்களுக்கு தொண்டாற்று. இந்த அரசாங்கத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் துருப்புச்சிட்டு நமது கையில் உள்ளது. தமிழராகிய நாம் சாதிக்க பிறந்தவர்களே தவிர, சாவதற்கு பிறந்தவர்கள் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். "நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும் ஜன்னல்கள் வழிகாட்டும்" என்பது பழமொழி. இந்த நம்பிக்கையுடன் போராடும் நம் இலங்கை வாழ் தமிழர்க்கு உன் தோழைக் கொடு, உன் உயிரை அல்ல.