Showing posts with label போட்டி. Show all posts
Showing posts with label போட்டி. Show all posts

Saturday, June 6, 2009

கொள்ளி.. கொள்ளி..

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
ஆசைக்கு ஒரு பெண் - ஆஸ்திக்கு ஒரு ஆண் என்று நம் நாட்டில் பலர் சொல்வதுண்டு. என் குடும்பமும் அதற்கு சான்றாக அமைந்தது. குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்று அனுபவித்து உணர்ந்தோம் நானும் என் மனைவியும். எங்கள் குழந்தைகளின் குறும்புத்தனமான செயல்கள், வேடிக்கையான கேள்விகள், அமிழ்தமான பேச்சு, அழகான சிரிப்பு என்பது போன்ற எண்ணற்ற சொல்லில் அடங்கா சந்தோசங்களால் எங்கள் குடும்பம் ஆனந்த மழையில் நனைந்தது.
யார் கண் பட்டதோ, திடிரென வந்த சுனாமியாய், நடுங்க வைக்கும் பூகம்பமாய், நாங்கள் நனைந்த ஆனந்த மழையில் இடியாய் வந்தது என் மகன் மரணத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தம் . மிகவும் நெடிய தூண்கள் கொண்ட மதுரை திருமலை நாயக்கர் மஹால் இன்ப சுற்றுலா சென்ற நாங்கள் இப்பொழுது எங்கள் வீட்டின் தூண்களின் அரவணைப்பில் துன்பமாய்.
சென்னையில் இருந்து மதுரைக்கு காரில் எங்கள் பயணம். கேலிக்கும், விளையாட்டுக்கும் மற்றும் சந்தோஷத்துக்கும் பஞ்சம் இல்லா பயணம். எங்கள் குழந்தைகளின் சின்னஞ்சிறு வழக்குகளைத் தீர்க்கும் நாட்டாமையான என் மனைவி , என் குழந்தைகளை உசுப்பேற்றி விட்டு அமைதியாய் வண்டி ஓட்டும் எனக்கு பேச்சுத் துணையாய் முன் இருக்கையில்.
எமன் எருமையில் வருவான் என்பார்கள், எங்களை கொண்டு செல்ல லாரியில் வந்தானோ என்னவோ? எங்கள் எதிராக அந்த லாரி அவ்வளவு வேகமாக வந்து கொண்டு இருந்தது. பின்னால் சைரன் அடித்து கொண்டு போலீஸ் வண்டியும். எமனைக் கண்ட நான் எப்படியோ வண்டியை மண்ணில் விட்டு ஒரு ஓரமாக நிறுத்தினேன். தாறுமாறாக வந்த அந்த எம வாகனமும் தடுப்பில் முட்டி நின்றது.
அதை ஓட்டி வந்தவன் போலீசிடம் இருந்து தப்ப எங்கள் வாகனம் இருந்த திசை நோக்கி ஓடி வந்தான். அப்பொழுது நானும், என் மனைவியும் என்னவென்று பார்க்க கார் கதவை திறந்து வெளியே வந்தோம். எங்களை கண்டு எங்கள் மகனும் கார் பின் கதவைத் திறந்தான். ஓடி வந்த அந்த நபர் அதில் இடித்துக் கீழே சாய்ந்தான்.அவனைக் கண்டு எங்கள் மகன் பயந்து வெளியே வராமல் அப்படியே உட்கார்ந்து விட்டான். ஆனால் அந்த பாவியோ போலீஸ் வருவதற்குள் சுதாரித்து என் மகனை அவனிடம் இழுத்துக் கொண்டான்.
என் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து தன்னைப் பிடிக்க வந்த போலீசை மிரட்ட ஆரம்பித்தான். கதி கலங்கிப் போன நானும் என் மனைவியும் அவனிடம் எங்கள் மகனை விட்டுவிடும் படியும் அதற்கு மாற்றாக என்ன கேட்டாலும் தருவதாக கூறினோம். போலீசும் குழந்தையை விட்டு விடும் படி எச்சரிக்கை செய்தனர். அவன் எங்கள் வண்டி சாவி யைத் தரும் படியும் தான் அதில் செல்வதாகவும், போலீஸ் தன்னைப் பின் தொடரக் கூடாது என்பதற்காக அவர்களின் வண்டி சாவியையும் கேட்டான்.
நாங்கள் எங்கள் வண்டி சாவியைத் தந்தோம். அதற்கு பிறகு போலீஸ் கான்ஸ்டபிள் ஒருத்தர் வண்டி சாவியைக் கொடுக்க எங்கள் அருகில் வந்தார். அவன் வாங்க சென்ற பொழுது, யாரும் எதிர்ப்பார்க்காதது நடந்தது. அவன் பிடியில் இருந்த என் மகன் திடிரென ரத்த வாந்தி எடுத்தான். நானும், என் மனைவி மட்டுமின்றி அந்த லாரி ஓட்டி வந்த அந்த நபரும்(அவன் திருடனாக இல்லை கொலைகாரனாக இல்லை தீவிரவாதியாக கூட இருக்கலாம்) நிலை குலைந்தோம். அந்த சந்தர்ப்பத்தில் எங்கிருந்து வந்த தைரியமோ என் மகனை அவன் கையில் இருந்து பிடுங்கினேன், போலீஸ் அந்த நபரைப் பிடித்தது.
நாங்கள் எங்கள் மகனை எடுத்துக்கொண்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு விரைந்தோம். அவர்கள் அவனை பரிசோத்தித்து விட்டு அவனுக்கு புற்றுநோய் உள்ளது என்றும், அதிகம் நேரம் அழுத காரணத்தால் இப்பொழுது ரத்த வாந்தி எடுத்துள்ளதாக கூறினர். எமன் போலீஸ் துரத்தி வந்த அந்த நபர் இல்லை நான் தான். என் மகன் எப்பொழுதும் அப்பா பிள்ளை. அவன் அம்மாவிடம் உள்ளதை விட என்னிடம் அதிக நேரம் செலவிடுவான். அதுவே அவனை இந்த நிலைமைக்குத் தள்ளி விட்டது.
நான் தொடர் புகைவண்டி(Chain Smoker) விடுவதில் திறமைசாலி. அந்த ப் புகையை நிறைய சுவாசித்ததால்(Passive Smoking) இப்பொழுது அவனுக்கு இந்த நிலைமை. நாங்கள் சென்னை திரும்பி வந்தோம். முன்பு அவன் சிரிப்பில் இறைவனைக் கண்ட நான், இப்பொழுது குற்ற உணர்வில் அவன் முகத்தை நேரே பார்க்க தைரியம் இன்றி கூனிக் குறுகி உள்ளேன். நான் என் வாயில் சிகரெட்டுக்குத் தினமும் வைத்த கொள்ளி என் மகனுக்கு நானே கொள்ளி போடக்கூடும் என்ற நிலைக்கு தள்ளிவிட்டதை எண்ணி தினம் சாகிறேன் அவனுடன் சேர்ந்து நானும்.
என் மகன் போல் இவ்வுலகில் எந்த ஒரு குழந்தையும் பாதிக்கப் பட கூடாது. புகைப்பிடிப்பவர்கள் புகைப் பிடிப்பதை நிறுத்த முடியா விட்டாலும், உங்கள் விட்டினுள் அல்லது புகைப் பிடிக்காத மற்றவர்களுடன் இருக்கும் பொழுது தயவு செய்து புகைப் பிடிக்காதீர்கள்.மற்றவர் துன்பத்திற்கு காரணகர்த்தா ஆகி விடாதீர்கள்.

'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Wednesday, April 22, 2009

பல்லவனில் இருந்து பல்லவிக்கு

பல வருடங்களாக எங்கள் பால்க்காரர் சைக்கிள் மணிக்கு அசராத நான், அம்மாவின் காபி மணத்தில் மயங்காத நான்,பாட்டியின் கெஞ்சலுக்கு மனம் இறங்காத நான், அப்பாவின் திட்டுக்கு அஞ்சாத நான், சுற்றி நடக்கும் எதையும் பொருட்டாக கருதாத நான், இன்று காலை சூரியன் தன் பணி துவுங்கும் முன், சாலை வாகனத்தின் இரைச்சல் கேட்கும் முன் எழுந்தேன். இன்று என் வாழ்க்கையின் முக்கிய முடிவை எடுக்க வேண்டியத் தருனம். சீக்கிரம் புறப்பட்டு, இறைவனிடம் நல்ல முடிவை எடுக்கும் திறன் வேண்டிவிட்டு எங்கள் பகுதி பேருந்து நிறுத்தம் அடைந்தேன்.

எப்பொழுதும் பேருந்து நேரத்திற்கு சரியாக வரும் நான், இன்று அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்துள்ளேன். ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக தோன்றியது. இந்த பேருந்து நிறுத்தமும், நான் பயணிக்கக் காத்திருக்கும் பேருந்தும் என் வாழ்க்கை பயணத்தில் ஒன்றாகக் கலந்து விட்டன. என் வாழ்க்கைப் பாதையை அசை போட ஆரம்பித்தேன். நான் இன்று ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியன். என்னிடம் நேற்றைய பேருந்து பயணத்தின் போது தன் காதலை வெளிப்படுத்திய ஒரு பெண்ணிற்கு என் பதிலைச் சொல்ல வேண்டும்.

நான்கு வருடங்களுக்கு முன், நான் வேலை செய்யும் கல்லூரியில் தான் என் இளநிலை பட்டப்படிப்பின் கடைசி வருடம் படித்து வந்தேன். அப்பொழுதும் இதே பேருந்தில் தான் என் பயணம். என் உறவுக்காரத் தங்கையின் தோழி, எங்கள் கல்லூரி கவி, என் கனவுக்கன்னி, கல்பனாவும் இதே வண்டியில் தான் வருவாள். அவள் முதலாம் ஆண்டு படித்து வந்தாள். அவளைப் பார்க்கவே நானும் நாள் தவறாமல் வந்து விடுவேன்.

இதே பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, எங்கள் பயணத் தோழனாம் இந்தப் பேருந்தில் தான் தயங்கித் தயங்கி "எளிதில் தீப்பற்றும் பொருட்களை பேருந்தில் கொண்டு செல்ல தடை, ஆனால் உன்னை கண்ட உடன் பற்றிக்கொள்ளும் என் இதயத்தை நான் என்ன பண்ணுவது? உன்னை கல்லூரிக்கு பத்திரமாகக் கொண்டு விடும் பொறுப்பையே இந்த பேருந்து ஓட்டுனருக்கு நீ தந்தது போல் நான் கல்லறைக்கு செல்லும் வரை என்னை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையே உனக்கு தருக்கிறேன், ஏற்றுக் கொள்வாயா?", என்று அவளிடம் சொன்னேன்.
"என் வாழ்க்கை துணை தேர்ந்தெடுக்கும் பக்குவம் எனக்கு இப்ப இல்லை. படிப்பில் தான் தன் முழு கவனமும் இப்பொழுது" என்றாள். கொஞ்சம் நாகரிகமாக தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாள். இது அவள் மேல் இருந்த மதிப்பைக் கூட்டியது.

இதன் பின்னர் பல வழியில் நான் முயற்சித்தும் பயனில்லை. எனது மேற்படிப்பை முடித்து அதே கல்லூரியில் பேராசிரியர் ஆனேன். அப்பொழுது அவள் கடைசி வருடம் பயின்று வந்தாள். அவளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. என் வேலை கண்ணியம் கருதி, தேவையானதை மட்டும் உரையாடி வந்தேன். அதே பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இந்த ஆண்டு , எங்கள் பயணத் தோழனாம் இந்த பேருந்தில் அவள் தயங்கித் தயங்கி "பேருந்தில் நான் உங்கள் அருகே ஜன்னலோரம் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். வாழ்க்கை முழுவதும்? " என்று இலை மறை காயாக தன் காதலை என்னிடம் சொன்னாள்.


இந்த வார்த்தை மூன்று வருடங்களுக்கு முன் நீ சொல்லி இருக்க கூடாதா? எத்தனை நாட்கள் இதற்காக ஏங்கி இருப்பேன். காலம் தாழ்த்தி சொல்லி விட்டாயே? உடைந்த கண்ணாடியை சேர்க்கப் பார்க்கிறாய். ஆனால் என் புத்தியில் அவள் காதலை ஏற்றால், நான் செய்யும் பணிக்கு களங்கம் வருமே என்று ஒரு போராட்டம் உருவானது. கடைசியில் என் மனதை அடக்கி அவளிடம் என் நிலையை விளக்கி அவள் காதலை நிராகரித்தேன்.

இப்பொழுது என் விட்டில் எனக்கு ஒரு பெண் பார்த்துள்ளனர். ஆனால் நேற்று பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி, கல்பனா எங்கள் பேருந்தில் வந்தாள். "சென்ற வருடம், நான் என் காதலை கூறிய பொழுது பணியைக் காரணம் காட்டி வேண்டாம் என்றீர்கள், இப்பொழுது நான் உங்கள் மாணவி இல்லை, ஆகையால் நான் உங்கள் மனைவியாக எந்த தடையும் இல்லையே?" என்று கேட்டாள். "நன்றாக யோசித்து தான் நான் இந்த முடிவு எடுத்துள்ளேன். நீங்களும் சிந்தித்து நல்ல ஒரு முடிவை நாளை சொல்லுங்கள்" என்று கூறி விட்டு சென்றாள்.


அவள் எடுத்த முடிவில் உறுதியாக உள்ளதும், அவள் என் மீது கொண்ட காதலும், அவளின் மேல் நான் கொண்ட காதலை மேலும் கூட்டியது. ஆனால் என் பெற்றோர் பார்த்துள்ள பெண்ணிற்கு என்ன பதில் சொல்ல முடியும் என்று என் புத்தி. மீண்டும் என் மனதுக்கும், புத்திக்கும் போராட்டம் உருவானது. முடிவு எடுக்க முடியாமல் திணறினேன். எங்கள் பேருந்து தெருமுனையில் திரும்புவதைக் கண்டு சுதாகரித்தேன்.

எனக்காக வழி மீது விழி வைத்து அவள் காத்திருந்தாள். அவளிடம் சென்று இம்முறையும் என்னால் நம் காதலை
உயிர்ப்பிக்க முடியாது என்று சொன்னேன். அவள் கண்களில் வழிந்த நீர் கடும் பாறையையும் உருகச் செய்யும். ஆனால் என் மனம் என்ற கல் பாறை உருகவில்லை எனென்றால் எப்பொழுதோ அதை அவளிடம் பண்டமாற்று செய்து விட்டேனே. அவள் பெற்றோர் மாப்பிளை பார்த்துள்ளத்தாக சொன்னாள். எல்லா காதலும் கல்யாணத்தில் முடிவதில்லையே என்று அவளை சமாதனம் செய்தேன்.

அன்று மாலை அதே பேருந்தில் என் பெற்றோர் பார்த்த பெண் வீட்டுக்குச் சென்றோம். எங்கள் இருவர் பெற்றோர் அளித்த காதல் பரிசு எங்கள் கல்யாண நிச்சயம் என்றும், என் காதலியின் குறும்பு விளையாட்டு தான் நேற்றும், இன்றும் நடைபெற்ற நாடகம் என்பதும் தெரிந்தது. நாங்களும் பரிசு அளித்தோம் அடுத்த வருடம் இதே பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி எங்கள் பெற்றோருக்கு எங்கள் பல்லவி( பல்லவன் திருத்தி பல்லவி என்று வைத்தோம்) மூலமாக.


பேருந்தை பற்றிய சில கவிதைகள்
------------------------------------------------------------------------
ஏழை பங்காளன் உற்ற தோழன் நீ...
சமுக விரோதிகளின் முதல் எதிரியும் நீ....
------------------------------------------------------------------------
உனக்குள் புகைப் பிடிக்க தடை...
சாலையில் புகைக் கக்க தடை இல்லை உனக்கு...
------------------------------------------------------------------------
மகளிர் மட்டும்... பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்...
------------------------------------------------------------------------
மக்களின் தரம் பார்க்காத உன்னை...
தரம் பிரித்து விட்டனர் அரசியல் வியாதிகள்...
------------------------------------------------------------------------

சங்கமம் - போட்டிக்காக


Friday, April 17, 2009

சங்கமம் - இது உங்களுக்கே நல்லா இருக்கா?


அப்பா, அம்மா சின்னப் பசங்க அழுதா, முட்டாய் வாங்கித் தரேன் இப்போ அழுகையை நிறுத்து என்று சமாதானம் செய்வது போல் கல்லூரிப் போட்டி முடிவு அறிவிச்ச உடனே, தோல்வி அடைந்தவர்களை மகிழ்ச்சியுட்டும் விதமாக "அடுத்தப் போட்டியினைப் பற்றிய அறிவிப்பு வரும் திங்கட்கிழமை அன்று எதிர்பாருங்கள்!" என்று ஒரு பிட் போட்டிங்க...

திங்கட்கிழமை பஸ் போட்டோ ஒன்னு போட்டு, "விவரம்: சித்திரை-2ம் நாள்
ஆவலுடன் காத்திருங்கள்" என்று அடுத்த பிட்டு போட்டிங்க... நானும் சித்திரை-2ம் நாள் இருந்த 10 நிமிசத்துக்கு ஒரு முறை போட்டி பக்கத்தை refresh பண்ணி பார்கிறேன், ஒன்னும் வரல :(

என்னைப் போன்ற சின்னப் பசங்களை இப்படி ஏமாற்றலாமா?.... அது தான் உங்கள் கேட்டரலாமனு இந்த இடுகையை பதிவு செய்துள்ளேன். இந்த தடவை நான் சரித்தரம் படைக்கணும் இல்ல... அது தான் கொஞ்சம் முந்திரிக் கொட்டை வேலை செய்துட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சுருங்க :).. சின்ன பையன் அறியாம செஞ்சுட்டேன். சீக்கிரம் விபரம் தாங்க... நானும் பிட்டு ரெடி பண்ணனும்.

Saturday, April 11, 2009

தேர்தலில் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி !!!!

மீண்டும் போட்டியிடுவேன்...... சரித்தரம் படைப்பேன்.

எந்த தேர்தலைப் பற்றி பேசுகிறேன் என்று குழப்பமா?
நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி இல்லை. நமது சங்கமம் வலைப்பதிவின் சார்பாக நடத்தப்பட்ட கல்லூரி என்ற தலைப்பின் கிழ் தங்கள் படைப்புகளை எழுதிய நம் வலைப்பதிவு சிங்ககள் மோதிக்கொண்ட தேர்தலைப் பற்றி சொல்கிறேன்.

இந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து சிங்ககளுக்கும் வாக்களித்த எல்லா வாக்காளப் பெருமக்களுக்கு என் முதர்க்கண் நன்றினை தெருவித்து கொள்கிறேன். இந்த தேர்தலில் நான் deposit கூட பெறவில்லை (இரண்டாம் சுற்றுக்கு கூட நான் தகுதி பெறவில்லை) என்பது வேறு விசியம். என்னுடைய படைப்பும் உங்களை கவர்ந்து அதற்கு நீங்கள் வாக்களித்து இருப்பின் என் நெஞ்சார்ந்த நன்றியினை உங்களுக்கு தெருவிக்க கடமை பட்டுள்ளேன்.

"இளங்கன்று பயம் அறியாது" என்று நான் போட்டி கட்டுரையில் கூறியதுப் போல், இந்த தோல்வியின் இருந்தும் நான் பாடம் கற்று கொண்டுள்ளேன் என்பதில் எனக்கு மிகவும் சந்தோசம். என்னைப் போன்ற இளங்கன்றுகளை ஊக்குவிக்க சங்கமம் வலைப்பதிவு மீண்டும் தயார் என்று அறிவித்துள்ளது மேலும் ஒரு பிரசாதம். "இது எல்லாம் நமக்கு புதுசா பாஸ்.... போங்க பாஸ்" என்று நாமும் அதற்கு தயாராகிவிட்டோம்.

இந்நேரத்தில் வெற்றிப்பெற்ற ”வெட்டிப்பயல்” பாலாஜி, சத்யராஜ் குமார் மற்றும் ”பினாத்தல்” சுரேஷ் அவர்களுக்கு என் சார்பாகவும், வாக்காளப் பெருமக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை பதிவுச் செய்க்கிறேன். அதேப் போல் வரும் நாடாளுமன்ற மன்ற தேர்தலிலும் அனைத்து நண்பர்களும் வாக்களித்து ஜனநாயகத்தை வெற்றிப் பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, March 11, 2009

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! நண்பனே!

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது

"பொதுவாக என் மனசு தங்கம் ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நமது தமிழ் வலைப்பதிவு சிங்கங்கள் சங்கமம் போட்டிக்குத் தங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு என் வாழ்த்துக்களை முதலில் பதிவு செய்கிறேன். "இளங்கன்று பயம் அறியாது" என்பார்கள், அதனால் தான் என்னவோ அவர்களுடன் போட்டியிட நானும் என் பதிவை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கருவறையில் இருந்து கல்லறையை நோக்கிச் செல்லும் பயணம் தான் வாழ்க்கை. இதில் கல்லூரி நாட்கள் என்பது ஒரு பூந்தோட்டம். அது போல் நம்மில் 90 சதவீத மக்களின் அடுத்து பயணிக்கும் பாதையை நிர்ணயிக்கப் போவதும் இங்கு தான். உலகில் பிறந்த அனைவருக்கும் இந்தத் தோட்டத்தைக் கடக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆங்கில ஆண்டை கி.பி மற்றும் கி.மு என்று வகைப்பிரிப்பது போல், நம்மில் பெரும்பாலோரின் வாழ்கையை கல்லூரி வாழ்க்கைக்கு முன் ( க.மு) மற்றும் கல்லூரி வாழ்க்கைக்குப் பின் ( க.பி) என்று வகைப்படுத்தலாம்.

சுவற்றில் அடித்த பந்து போல திரும்பத் திரும்ப நம் கல்லூரி நாட்களின் பாதிப்பு, நம் வாழ்க்கைப் பயணத்தின் அனைத்து கட்டங்களிலும் பிரதிபலிக்கும். "நாம் கல்லூரியில் இப்படி இருந்திருந்தால், இந்த பாதையில் சென்று இருக்கலாமோ?", "நாம் கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்கவில்லையோ?" என்று கல்லூரி தொடர்பான ஏதேனும் ஒரு கேள்வி நம் அனைவர் மனதிலும் எழும். ஒரு பட்டாம் பூச்சியின் சிறகசைவு வளி மண்டலத்தில் ஏற்படுத்தும் சிறு மாற்றம் கூட காலப் பெருவெளியில் ஒரு சூறாவளி ஏற்படக் காரணமாக இருக்கலாம் அல்லவா?

"நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்" என்பார்கள். ஆகையால் நிகழ்காலத்தில்(கல்லூரி காலம்) மகிழ்ச்சியாய் இருந்து கொண்டு, எதிர்கால வாழ்க்கையின் உயர்வுக்குப் பயன்படுத்திட தேவையான அடிச்சுவடுகளை அமைத்துக் கொண்டு, வருங்காலத்தையும் மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ளும்படி இக்கட்டுரை வாயிலாக இக்கால மாணவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு இருந்தாலும், இல்லாவிட்டலும் கல்லூரி நிகழ்ச்சிகள் வாழ்வில் என்று நினைத்தாலும் பசுமை மாறாதது. வருங்காலத்தையும் மனதில் கொண்டால் மேலும் மெருகேறும் என்பதே என் வேண்டுகோள்.

கல்லூரிக் காதல் அனுபவிக்காதவர் பலர், கல்லூரி நட்பு கொள்ளாதவர் மனிதர் அல்லர். "வாங்க பழகலாம்" என்று ஆரம்பித்து, "நீ இல்லாமல் நான் இல்லை" என்று வளர்ந்து, "முஸ்தபா முஸ்தபா" என்று பாடிப் பிரிந்து, "எங்கு இருந்தாலும் வாழ்க" என்று இப்பொழுது இருந்தாலும் நட்பின் ஆழம் மட்டும் என்றும் குறைவதில்லை. அலைபேசி, வலைத்தளம் உதவியால் பிரிவின் தாக்கம் சிறிது குறைந்தாலும், வாழ்க்கை தாக்கத்தால் இன்னும் குறையவில்லை தூரம். இது மாற வேண்டும் என்பது தான் என் தணியாத தாகம்.

சாதி சமயம் பார்த்ததில்லை. கல்லூரியில் நிற்காத இடமில்லை. பார்க்காத படங்கள் இல்லை. நோக்காத பெண்கள் இல்லை. பேசாத வார்த்தைகளும் இல்லை. கடன் வைத்து சாப்பிடாத உணவு விடுதிகளும் இல்லை. ஆசிரியர்களிடம் திட்டு வாங்காத நாட்கள் இல்லை. பணம் நமக்கு ஒரு பொருட்டாக இருந்ததில்லை. அம்மா கொடுத்து அனுப்பும் தின்பண்டம் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்ததில்லை. நாம் தோல்வியடைந்தாலும் நண்பனின் வெற்றியில் பங்கெடுக்க மறந்ததில்லை. அவர்கள் நம்மைத் தேற்றவும் மறந்ததில்லை. பிரிய மனம் இருந்ததில்லை.

கல்லூரி நாட்களின் அருமை பெருமைகளைப் பேச இந்த ஒரு பதிவு போதாதே! நகைச்சுவை சம்பவம் இதோ, "கல்லூரியின் முதல் வருடம், வகுப்பு பிரதிநிதி தேர்தல். நான் நிற்க விரும்பினேன். என் நண்பர்கள் அனைவரும் சரி என்று ஆமோதித்து, என்ன ஏத்தி விட்டு நிக்க சொன்னானுக. தேர்தல் நாள். வகுப்பு ஆசிரியை யார் யார் போட்டி இட விருப்பம் என் கேட்டார்கள்?. நான் எழுந்து நின்றேன். வேற யாருக்காவது விருப்பம் இருக்கா என்று கேட்டார்கள்?. யாரும் எழவில்லை. எனக்கோ மனதில் சந்தோசம்.

கொஞ்சம் நேரம் கழித்து என் அருகில் அமர்ந்து இருந்த நண்பன் எழுந்தான். "மாப்பி வைச்சுட்டாண்ட ஆப்பு" என்று மனசுகுள்ள ஒரு நினைப்பு. அதே மாதிரி தேர்தல் நடந்தது. என்னக்காக ஒரே ஒரு பெண் தோழி மட்டும் கை தூக்கினாள். பசங்க ஒருத்தனும் கை தூக்கவே இல்லை. பின்னர் தான் தெரிந்தது எல்லாம் பேசி வைத்து செய்துள்ளனர் என்று. "உசுபேத்தி உசுபேத்தியே உடம்ப ரண களம் ஆக்கிட்டிங்களே டா" வடிவேலு ஸ்டைல்ல பேசி சிரிச்சது தான் மிச்சம்.

நெகிழ்ச்சியான சம்பவம் இதோ, "கல்லூரியின் கடைசி வருடம், வேலைவாய்ப்பு முகாம்கள் நிறைந்த ஆண்டு, மற்ற கல்லூரிகளில் நடைபெற்றாலும் சென்று பந்குபெறுவோம் . எனக்கு ஒவ்வொரு முறையும் கடைசி சுற்றில் வாய்ப்பில்லாமல் போகும். அவ்வாறு நடைப்பெற்ற ஒரு முகாமில் எழுத்து தேர்விலேயே நான் நிராகரிக்கப்பட்டேன்.

மறுநாள் காலை மணி 9.00. நிராகரிக்கப்பட்டவர்களில் இருந்து மீண்டும் 5 நபர்களை தேர்ந்தெடுத்தனர். அதில் நானும் ஒருவன். நான் மீண்டும் தேர்வாகக் காரணமாய், அவர்கள் குறிப்பிடக் கால நேரத்தில் சென்றடைய உதவியாய், நேர்முகத் தேர்வில் வெற்றி பெற தேவையான யுக்த்திகள் சொல்லித்தர மற்றும் என்னோடு கடைசி வரை இருந்து ஊக்கம் தந்தது போன்று இதில் அனைத்து கட்டங்களிலும் என் நண்பர்களின் பங்கு இருந்தது.

முடிவுகள் அறிவித்தனர். நான் தேர்வாகி இருந்தேன். என்னை விட அதிகம் மகிழ்ச்சி அடைந்தவர்கள் என் நண்பர்களே. இன்றும் அதே நிறுவனத்தில் தான் நான் பணி புரிகிறேன். ஆனால் எனது இந்த பயணத்தில் என் நண்பர்களின் பங்கு மிக முக்கியமானது, என்னால் இன்றும் மறக்க இயலாது." மேலே பகிர்ந்து கொண்ட இரண்டு சம்பவங்களுக்கும் ஒரே நண்பன் தான் காரணம்.

எத்தனை ஊடல்கள், கூடல்கள். இதுபோல் ஒன்றா, இரண்டா நிகழ்ச்சிகளை, எல்லாம் சொல்லவே ஒரு வாரம் போதுமா?

வறுமையின் பிடியிருந்து மீள முயலும் என் எண்ணற்ற சகோதர, சகோதிரிகளின் ஆசையில் மண்னை அள்ளி போடுக்கின்றனர் இன்றைய கல்வி விற்கும் வியாபாரிகள். காமராஜர் கண்ட கனவு பலிக்காதா?. மற்ற வளர்ந்த நாடுக்களில் உள்ளது போல் நமது நாட்டின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்படாதா? கல்விதான் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றும் என்று அரசியல்வாதிகள் கூறினால் மட்டும் போதாது, நடைமுறைப் படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்கள் அரசியல்வியாதிகள் தான். இந்த கல்வி வியாபாரத்திற்கு முற்றுபுள்ளி வைக்கும் நாள் கூடிய விரைவில் வர வேண்டும். அனைவருக்கும் இந்த தோட்டத்தைக் கடக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். இதற்கு நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோமாக. இந்த நேரத்தில் நான் இந்த பூந்தோட்டத்தைக் கடக்க காரணமான என் தாய் மாமாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை இப்பதிவின் முலம் சமர்ப்பிக்கிறேன்.

சங்கமம் - போட்டிக்காக