Saturday, April 3, 2010

தாய்க்கு பின் யாரோ?

என்னை அவர்கள் கருவறையில் சுமந்தது இல்லாமல், கண்ணை இமை காப்பது போல் என்னை பல வருடங்கள் அவர்கள் நிழலையே வளர்த்து விட்டார்கள் என் தாய். அவர்களை அடுத்து என் வாழ்க்கையில் யாரின் சுவுடுகள் அதிகம் பதிந்துள்ளது என்று சிந்திக்க தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் எத்தனையோ பேர் வந்த சுவடே தெரியாமல் சென்றுவிடுகின்றனர். "வந்தார், போனார்" என்று இல்லாமல், ஒரு சிலரே அவர்களின் எல்லையில்லா அன்பு, வற்றாத பாசம், உண்மையான அக்கறை காரணமாக என் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் தொப்புள் கோடி உறவுகள் நமக்கு தோள் கொடுப்பதே ஆச்சரியம் என்றால், எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து காலத்தின் கட்டாயத்தால் சேர்ந்து, அதே காலத்தின் கட்டாயத்தால் இன்று பிரிந்து இருந்தாலும் தோளுக்கு தோளாய் நம்முடன் இருக்கும் நண்பர்களின் உறவு என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது. மற்ற எந்த உறவிடம் ஏற்படாத பிணைப்பு மற்றும் சுதந்திரம் இந்த உறவில் கிடைக்கின்றது. தாய், மனைவிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாததை நண்பனிடம் பகிர்ந்து கொள்ள இயலும். பெருக்கெடுத்து ஓடும் நைல் நதி கூட வறண்டு விடலாம் ஒரு நாள், ஆனால் உண்மையான நட்பு என்றைக்கும் வற்றாத ஒரு ஜீவநதி.
நட்பின் தாக்கம் என்னை பள்ளி நாட்களில் தூறலாக, கல்லூரி நாட்களில் மழையாக, அதன் பின் இடியுடன் சேர்ந்து புயலாக என்னை தாக்கியது. நட்பின் பெருமை சிறிது காலம் கடந்தே நான் உணர்ந்தாலும், என் உயிர் உள்ளவரை என் உணர்வுகளில் கலந்திட்ட பல நண்பர்கள் கிடைத்தனர். "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?" என்ற வரிகளை கடைசி வரை நண்பன் என்பதை மனதில் வைத்து எழுதினாரோ கண்ணதாசன் தெரியாது எனக்கு, ஆனால் என் வாழ்க்கையின் கடைசி அத்தியாயம் வரைக்கும் என் நண்பர்களின் நேசம் என் சுவாசமாக வேண்டும்.
காக்கைகள் பொறாமை கொண்டன நம் பகிரிந்துணர்வை கண்டு, சுமைதாங்கியும் பெருமைபட்டது நம் மற்றவர் துயரங்களை தோள் கொடுத்து சுமப்பதை கண்டு, தாய் பாசத்துக்கு போட்டியில்லை என்று எண்ணினர் நம் பாசபினைப்பை காணும் வரை, பெண்களின் மனதின் ஆழம் பெரியது என்று எண்ணினர் நம் நட்பின் ஆழத்தை காணும் வரை, சந்திரனும் கிறங்கி போனான் நம் நடுநிசை பிறந்தநாள் கொண்டாட்டத்தை கண்டு, மேகங்கள் இறங்கி வந்தன நம் சந்தோசத்தில் பங்கு கொள்ள. நட்புக்கு எல்லை கண்டதில்லை நாம், காணவும் விரும்பியதில்லை. காலன் வென்றான் நம்மை தனிமை படுத்துவதில், ஆனாலும் தோற்றான் இதனால் நம் நட்பு இம்மி அளவும் குறையாததால்.
உன்னை எல்லாம் பிரிந்து தொலைதூரத்தில் இருந்தாலும், நாம் பழகிய பசுமையான நினைவுகள் என் மனதில் தென்றலாய் என்றும் விசுகிறது. காரணம் எதுவுமின்றி உன்னை தொடர்பு கொள்கிறேன், காரணம் கிடைத்தால் உடனே தொடர்பு கொள்கிறேன். பிரிவு என்பது நம் கையில் தான் உள்ளது. "நண்பனே, உன்னை இவன் என் பழைய நண்பன் என்று அறிமுக படுத்தாமல், என் உயிர் நண்பன் இவன் என்று நான் கல்லறை செல்லும் வரை அறிமுகபடுத்த வேண்டும்" என்று இறைவனை எப்பொழுதும் வேண்டி கொள்கிறேன். கண்டிப்பாக நான் முயற்சி செய்வேன், உங்களை இழக்க தயராக இல்லை. நல்ல நட்பு என்பது எதவும் எதிர்பார்க்காமல் தருவதில் இரட்டிப்பாகுது.
"தாய்க்கு பின் தாரம்" என்பார்கள் நம் முன்னோர்கள், என்னை பொறுத்த வரை என் தாய்க்கு அடுத்து என் வாழ்வில் இரண்டுற கலந்து நிற்பவர்கள் என் நண்பர்கள். ஒரு கூட்டு பறவைகளாக காலம் கழித்த நம் கூட்டுக்கு சிக்கரம் திரும்பி வர வேண்டும் என் மனம் விரும்புகிறது.