Wednesday, March 11, 2009

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! நண்பனே!

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது

"பொதுவாக என் மனசு தங்கம் ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நமது தமிழ் வலைப்பதிவு சிங்கங்கள் சங்கமம் போட்டிக்குத் தங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு என் வாழ்த்துக்களை முதலில் பதிவு செய்கிறேன். "இளங்கன்று பயம் அறியாது" என்பார்கள், அதனால் தான் என்னவோ அவர்களுடன் போட்டியிட நானும் என் பதிவை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கருவறையில் இருந்து கல்லறையை நோக்கிச் செல்லும் பயணம் தான் வாழ்க்கை. இதில் கல்லூரி நாட்கள் என்பது ஒரு பூந்தோட்டம். அது போல் நம்மில் 90 சதவீத மக்களின் அடுத்து பயணிக்கும் பாதையை நிர்ணயிக்கப் போவதும் இங்கு தான். உலகில் பிறந்த அனைவருக்கும் இந்தத் தோட்டத்தைக் கடக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆங்கில ஆண்டை கி.பி மற்றும் கி.மு என்று வகைப்பிரிப்பது போல், நம்மில் பெரும்பாலோரின் வாழ்கையை கல்லூரி வாழ்க்கைக்கு முன் ( க.மு) மற்றும் கல்லூரி வாழ்க்கைக்குப் பின் ( க.பி) என்று வகைப்படுத்தலாம்.

சுவற்றில் அடித்த பந்து போல திரும்பத் திரும்ப நம் கல்லூரி நாட்களின் பாதிப்பு, நம் வாழ்க்கைப் பயணத்தின் அனைத்து கட்டங்களிலும் பிரதிபலிக்கும். "நாம் கல்லூரியில் இப்படி இருந்திருந்தால், இந்த பாதையில் சென்று இருக்கலாமோ?", "நாம் கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்கவில்லையோ?" என்று கல்லூரி தொடர்பான ஏதேனும் ஒரு கேள்வி நம் அனைவர் மனதிலும் எழும். ஒரு பட்டாம் பூச்சியின் சிறகசைவு வளி மண்டலத்தில் ஏற்படுத்தும் சிறு மாற்றம் கூட காலப் பெருவெளியில் ஒரு சூறாவளி ஏற்படக் காரணமாக இருக்கலாம் அல்லவா?

"நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்" என்பார்கள். ஆகையால் நிகழ்காலத்தில்(கல்லூரி காலம்) மகிழ்ச்சியாய் இருந்து கொண்டு, எதிர்கால வாழ்க்கையின் உயர்வுக்குப் பயன்படுத்திட தேவையான அடிச்சுவடுகளை அமைத்துக் கொண்டு, வருங்காலத்தையும் மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ளும்படி இக்கட்டுரை வாயிலாக இக்கால மாணவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு இருந்தாலும், இல்லாவிட்டலும் கல்லூரி நிகழ்ச்சிகள் வாழ்வில் என்று நினைத்தாலும் பசுமை மாறாதது. வருங்காலத்தையும் மனதில் கொண்டால் மேலும் மெருகேறும் என்பதே என் வேண்டுகோள்.

கல்லூரிக் காதல் அனுபவிக்காதவர் பலர், கல்லூரி நட்பு கொள்ளாதவர் மனிதர் அல்லர். "வாங்க பழகலாம்" என்று ஆரம்பித்து, "நீ இல்லாமல் நான் இல்லை" என்று வளர்ந்து, "முஸ்தபா முஸ்தபா" என்று பாடிப் பிரிந்து, "எங்கு இருந்தாலும் வாழ்க" என்று இப்பொழுது இருந்தாலும் நட்பின் ஆழம் மட்டும் என்றும் குறைவதில்லை. அலைபேசி, வலைத்தளம் உதவியால் பிரிவின் தாக்கம் சிறிது குறைந்தாலும், வாழ்க்கை தாக்கத்தால் இன்னும் குறையவில்லை தூரம். இது மாற வேண்டும் என்பது தான் என் தணியாத தாகம்.

சாதி சமயம் பார்த்ததில்லை. கல்லூரியில் நிற்காத இடமில்லை. பார்க்காத படங்கள் இல்லை. நோக்காத பெண்கள் இல்லை. பேசாத வார்த்தைகளும் இல்லை. கடன் வைத்து சாப்பிடாத உணவு விடுதிகளும் இல்லை. ஆசிரியர்களிடம் திட்டு வாங்காத நாட்கள் இல்லை. பணம் நமக்கு ஒரு பொருட்டாக இருந்ததில்லை. அம்மா கொடுத்து அனுப்பும் தின்பண்டம் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்ததில்லை. நாம் தோல்வியடைந்தாலும் நண்பனின் வெற்றியில் பங்கெடுக்க மறந்ததில்லை. அவர்கள் நம்மைத் தேற்றவும் மறந்ததில்லை. பிரிய மனம் இருந்ததில்லை.

கல்லூரி நாட்களின் அருமை பெருமைகளைப் பேச இந்த ஒரு பதிவு போதாதே! நகைச்சுவை சம்பவம் இதோ, "கல்லூரியின் முதல் வருடம், வகுப்பு பிரதிநிதி தேர்தல். நான் நிற்க விரும்பினேன். என் நண்பர்கள் அனைவரும் சரி என்று ஆமோதித்து, என்ன ஏத்தி விட்டு நிக்க சொன்னானுக. தேர்தல் நாள். வகுப்பு ஆசிரியை யார் யார் போட்டி இட விருப்பம் என் கேட்டார்கள்?. நான் எழுந்து நின்றேன். வேற யாருக்காவது விருப்பம் இருக்கா என்று கேட்டார்கள்?. யாரும் எழவில்லை. எனக்கோ மனதில் சந்தோசம்.

கொஞ்சம் நேரம் கழித்து என் அருகில் அமர்ந்து இருந்த நண்பன் எழுந்தான். "மாப்பி வைச்சுட்டாண்ட ஆப்பு" என்று மனசுகுள்ள ஒரு நினைப்பு. அதே மாதிரி தேர்தல் நடந்தது. என்னக்காக ஒரே ஒரு பெண் தோழி மட்டும் கை தூக்கினாள். பசங்க ஒருத்தனும் கை தூக்கவே இல்லை. பின்னர் தான் தெரிந்தது எல்லாம் பேசி வைத்து செய்துள்ளனர் என்று. "உசுபேத்தி உசுபேத்தியே உடம்ப ரண களம் ஆக்கிட்டிங்களே டா" வடிவேலு ஸ்டைல்ல பேசி சிரிச்சது தான் மிச்சம்.

நெகிழ்ச்சியான சம்பவம் இதோ, "கல்லூரியின் கடைசி வருடம், வேலைவாய்ப்பு முகாம்கள் நிறைந்த ஆண்டு, மற்ற கல்லூரிகளில் நடைபெற்றாலும் சென்று பந்குபெறுவோம் . எனக்கு ஒவ்வொரு முறையும் கடைசி சுற்றில் வாய்ப்பில்லாமல் போகும். அவ்வாறு நடைப்பெற்ற ஒரு முகாமில் எழுத்து தேர்விலேயே நான் நிராகரிக்கப்பட்டேன்.

மறுநாள் காலை மணி 9.00. நிராகரிக்கப்பட்டவர்களில் இருந்து மீண்டும் 5 நபர்களை தேர்ந்தெடுத்தனர். அதில் நானும் ஒருவன். நான் மீண்டும் தேர்வாகக் காரணமாய், அவர்கள் குறிப்பிடக் கால நேரத்தில் சென்றடைய உதவியாய், நேர்முகத் தேர்வில் வெற்றி பெற தேவையான யுக்த்திகள் சொல்லித்தர மற்றும் என்னோடு கடைசி வரை இருந்து ஊக்கம் தந்தது போன்று இதில் அனைத்து கட்டங்களிலும் என் நண்பர்களின் பங்கு இருந்தது.

முடிவுகள் அறிவித்தனர். நான் தேர்வாகி இருந்தேன். என்னை விட அதிகம் மகிழ்ச்சி அடைந்தவர்கள் என் நண்பர்களே. இன்றும் அதே நிறுவனத்தில் தான் நான் பணி புரிகிறேன். ஆனால் எனது இந்த பயணத்தில் என் நண்பர்களின் பங்கு மிக முக்கியமானது, என்னால் இன்றும் மறக்க இயலாது." மேலே பகிர்ந்து கொண்ட இரண்டு சம்பவங்களுக்கும் ஒரே நண்பன் தான் காரணம்.

எத்தனை ஊடல்கள், கூடல்கள். இதுபோல் ஒன்றா, இரண்டா நிகழ்ச்சிகளை, எல்லாம் சொல்லவே ஒரு வாரம் போதுமா?

வறுமையின் பிடியிருந்து மீள முயலும் என் எண்ணற்ற சகோதர, சகோதிரிகளின் ஆசையில் மண்னை அள்ளி போடுக்கின்றனர் இன்றைய கல்வி விற்கும் வியாபாரிகள். காமராஜர் கண்ட கனவு பலிக்காதா?. மற்ற வளர்ந்த நாடுக்களில் உள்ளது போல் நமது நாட்டின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்படாதா? கல்விதான் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றும் என்று அரசியல்வாதிகள் கூறினால் மட்டும் போதாது, நடைமுறைப் படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்கள் அரசியல்வியாதிகள் தான். இந்த கல்வி வியாபாரத்திற்கு முற்றுபுள்ளி வைக்கும் நாள் கூடிய விரைவில் வர வேண்டும். அனைவருக்கும் இந்த தோட்டத்தைக் கடக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். இதற்கு நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோமாக. இந்த நேரத்தில் நான் இந்த பூந்தோட்டத்தைக் கடக்க காரணமான என் தாய் மாமாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை இப்பதிவின் முலம் சமர்ப்பிக்கிறேன்.

சங்கமம் - போட்டிக்காக

8 comments:

ILA said...

போட்டிக்கான வாழ்த்துக்கள்

SUREஷ் said...

நெரயா மேட்டரா சுருக்கமாகச் சொல்லீங்க பாஸ்..

சந்துரு said...

நிச்சியம் முயற்சி செய்க்கிறேன். பின்னோட்டத்திற்கு நன்றி நண்பர்களே. நான் இளங்கன்று, மெருகேற உங்கள் கருத்துக்கள் நிச்சயம் உதவும்.

Nirmals World said...

காதல் காவியம் போல் இங்கு கல்லூரியின் நண்பன் காவியம் மலர்கிறது !!

எனது வாழ்த்துக்கள் , மிக நன்றாக இருந்தது

Senthil Nathan said...

போட்டிக்கான வாழ்த்துக்கள், மிக நன்றாக இருந்தது

அன்புடன் அருணா said...

ரொம்பப் பொதுவாக எழுதிவிட்டீர்களோ என்றிருக்கிறது....(generalised)ஆனாலும் நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள்....
அன்புடன் அருணா

வெங்கிராஜா said...

உங்களது சங்கமம் போட்டி கதை குறித்த எனது எளிய கருத்துக்களை இங்கே உரைத்திருக்கிறேன். ஒரு முறை வாசித்து பாருங்களேன்.
http://paathasaari.blogspot.com/2009/04/blog-post_01.html

dino said...

Please sir Please stop all these BULL SHITS

Post a Comment