Tuesday, April 28, 2009

கருணாநிதி உண்ணாவிரதப் போராட்டமும் ஆதரவு அலையும்


இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழினத் தலைவராம், முத்தமிழ் அறிஞர், வாழும் வள்ளுவர், தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி நேற்று காலை திடீரென உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் இறங்கினார். வயதான காலத்தில் உண்ணாநோன்பிருந்து தமிழர்களுக்காக கஷ்டப்படுகிறார், நெடுங்காலமாக ஈழத்தமிழர் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஒரே தலைவர், காங்கிரஸை மிரட்டிப் பணிய வைத்தார் என்று நமது வலைதள உலகத்தில் ஆதரவு அலை விசியது. எதிர்ப்பு அலைக்கு எதிராக பார்பானியத்தை எதிர்த்த கோபம்தான் கலைஞரை திரும்பிய பக்கம் எல்லாம் தாக்குகின்றது என்றும் எழுதினார்கள்.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்காக எழுதிய நண்பர்களே நீங்களே சற்று அமைதியாக கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். அவர் நினைத்து இருந்தால் எவளவோ செய்து இருக்க முடியும், மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றிருந்தால் இலங்கையில் போர் நிறுத்தம் எப்பொழுதோ நிச்சயமாக ஏற்பட்டிருக்கும். தி.மு.க ஆதரவு இல்லாமல் மத்திய அரசை காங்கிரஸ் கட்சியால் தொடர்ந்து இருக்க முடியுமா? இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேவையும் இருந்திருக்காது.

ஆனால் அவரோ தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல், மனிதசங்கிலி போராட்டம், மன்மோகன்சிங், சோனியாகாந்திக்கு தந்தி அனுப்புவது, கடிதம் எழுவது, பொது வேலை நிறுத்தம் என்று எத்தனை எத்தனை நாடகங்கள். அவர் நாடகங்கள் என்று எழுதியதை காட்டிலும் இந்த நாடகங்களின் எண்ணிக்கை அதிகம் என்று நினைக்கிறேன். கடைசி நாடகம், தவறு தற்போதிய நாடகம் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டமும்.

மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றிருந்தால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி இலங்கை போர்நிறுத்தம் கொண்டு வந்திருக்கும். ஒருவேளை காங்கிரஸ் கட்சி இங்கு தமிழகத்திலும் ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்றால், மீண்டும் தேர்தல் சந்தித்து பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி திரும்பவும் ஆட்சி கட்டில் ஏறி இருக்கலாம். கவிஞர் தாமரை கூறியது போல், அவர் மதிப்பு மக்கள் மனதில் உயர்ந்திருக்கும்.

எனினும்
ஈழப் பிரச்னையை பொறுத்தவரை யார் அமாவாசை? என்று அவர் கூறியதில் எனக்கு உடன்பாடில்லை. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அவரின் இந்த நாடகங்களுக்கு நீங்கள் வரவேற்ப்பு தருவதா வேண்டாமா என்று?

Wednesday, April 22, 2009

பல்லவனில் இருந்து பல்லவிக்கு

பல வருடங்களாக எங்கள் பால்க்காரர் சைக்கிள் மணிக்கு அசராத நான், அம்மாவின் காபி மணத்தில் மயங்காத நான்,பாட்டியின் கெஞ்சலுக்கு மனம் இறங்காத நான், அப்பாவின் திட்டுக்கு அஞ்சாத நான், சுற்றி நடக்கும் எதையும் பொருட்டாக கருதாத நான், இன்று காலை சூரியன் தன் பணி துவுங்கும் முன், சாலை வாகனத்தின் இரைச்சல் கேட்கும் முன் எழுந்தேன். இன்று என் வாழ்க்கையின் முக்கிய முடிவை எடுக்க வேண்டியத் தருனம். சீக்கிரம் புறப்பட்டு, இறைவனிடம் நல்ல முடிவை எடுக்கும் திறன் வேண்டிவிட்டு எங்கள் பகுதி பேருந்து நிறுத்தம் அடைந்தேன்.

எப்பொழுதும் பேருந்து நேரத்திற்கு சரியாக வரும் நான், இன்று அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்துள்ளேன். ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக தோன்றியது. இந்த பேருந்து நிறுத்தமும், நான் பயணிக்கக் காத்திருக்கும் பேருந்தும் என் வாழ்க்கை பயணத்தில் ஒன்றாகக் கலந்து விட்டன. என் வாழ்க்கைப் பாதையை அசை போட ஆரம்பித்தேன். நான் இன்று ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியன். என்னிடம் நேற்றைய பேருந்து பயணத்தின் போது தன் காதலை வெளிப்படுத்திய ஒரு பெண்ணிற்கு என் பதிலைச் சொல்ல வேண்டும்.

நான்கு வருடங்களுக்கு முன், நான் வேலை செய்யும் கல்லூரியில் தான் என் இளநிலை பட்டப்படிப்பின் கடைசி வருடம் படித்து வந்தேன். அப்பொழுதும் இதே பேருந்தில் தான் என் பயணம். என் உறவுக்காரத் தங்கையின் தோழி, எங்கள் கல்லூரி கவி, என் கனவுக்கன்னி, கல்பனாவும் இதே வண்டியில் தான் வருவாள். அவள் முதலாம் ஆண்டு படித்து வந்தாள். அவளைப் பார்க்கவே நானும் நாள் தவறாமல் வந்து விடுவேன்.

இதே பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, எங்கள் பயணத் தோழனாம் இந்தப் பேருந்தில் தான் தயங்கித் தயங்கி "எளிதில் தீப்பற்றும் பொருட்களை பேருந்தில் கொண்டு செல்ல தடை, ஆனால் உன்னை கண்ட உடன் பற்றிக்கொள்ளும் என் இதயத்தை நான் என்ன பண்ணுவது? உன்னை கல்லூரிக்கு பத்திரமாகக் கொண்டு விடும் பொறுப்பையே இந்த பேருந்து ஓட்டுனருக்கு நீ தந்தது போல் நான் கல்லறைக்கு செல்லும் வரை என்னை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையே உனக்கு தருக்கிறேன், ஏற்றுக் கொள்வாயா?", என்று அவளிடம் சொன்னேன்.
"என் வாழ்க்கை துணை தேர்ந்தெடுக்கும் பக்குவம் எனக்கு இப்ப இல்லை. படிப்பில் தான் தன் முழு கவனமும் இப்பொழுது" என்றாள். கொஞ்சம் நாகரிகமாக தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாள். இது அவள் மேல் இருந்த மதிப்பைக் கூட்டியது.

இதன் பின்னர் பல வழியில் நான் முயற்சித்தும் பயனில்லை. எனது மேற்படிப்பை முடித்து அதே கல்லூரியில் பேராசிரியர் ஆனேன். அப்பொழுது அவள் கடைசி வருடம் பயின்று வந்தாள். அவளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. என் வேலை கண்ணியம் கருதி, தேவையானதை மட்டும் உரையாடி வந்தேன். அதே பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இந்த ஆண்டு , எங்கள் பயணத் தோழனாம் இந்த பேருந்தில் அவள் தயங்கித் தயங்கி "பேருந்தில் நான் உங்கள் அருகே ஜன்னலோரம் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். வாழ்க்கை முழுவதும்? " என்று இலை மறை காயாக தன் காதலை என்னிடம் சொன்னாள்.


இந்த வார்த்தை மூன்று வருடங்களுக்கு முன் நீ சொல்லி இருக்க கூடாதா? எத்தனை நாட்கள் இதற்காக ஏங்கி இருப்பேன். காலம் தாழ்த்தி சொல்லி விட்டாயே? உடைந்த கண்ணாடியை சேர்க்கப் பார்க்கிறாய். ஆனால் என் புத்தியில் அவள் காதலை ஏற்றால், நான் செய்யும் பணிக்கு களங்கம் வருமே என்று ஒரு போராட்டம் உருவானது. கடைசியில் என் மனதை அடக்கி அவளிடம் என் நிலையை விளக்கி அவள் காதலை நிராகரித்தேன்.

இப்பொழுது என் விட்டில் எனக்கு ஒரு பெண் பார்த்துள்ளனர். ஆனால் நேற்று பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி, கல்பனா எங்கள் பேருந்தில் வந்தாள். "சென்ற வருடம், நான் என் காதலை கூறிய பொழுது பணியைக் காரணம் காட்டி வேண்டாம் என்றீர்கள், இப்பொழுது நான் உங்கள் மாணவி இல்லை, ஆகையால் நான் உங்கள் மனைவியாக எந்த தடையும் இல்லையே?" என்று கேட்டாள். "நன்றாக யோசித்து தான் நான் இந்த முடிவு எடுத்துள்ளேன். நீங்களும் சிந்தித்து நல்ல ஒரு முடிவை நாளை சொல்லுங்கள்" என்று கூறி விட்டு சென்றாள்.


அவள் எடுத்த முடிவில் உறுதியாக உள்ளதும், அவள் என் மீது கொண்ட காதலும், அவளின் மேல் நான் கொண்ட காதலை மேலும் கூட்டியது. ஆனால் என் பெற்றோர் பார்த்துள்ள பெண்ணிற்கு என்ன பதில் சொல்ல முடியும் என்று என் புத்தி. மீண்டும் என் மனதுக்கும், புத்திக்கும் போராட்டம் உருவானது. முடிவு எடுக்க முடியாமல் திணறினேன். எங்கள் பேருந்து தெருமுனையில் திரும்புவதைக் கண்டு சுதாகரித்தேன்.

எனக்காக வழி மீது விழி வைத்து அவள் காத்திருந்தாள். அவளிடம் சென்று இம்முறையும் என்னால் நம் காதலை
உயிர்ப்பிக்க முடியாது என்று சொன்னேன். அவள் கண்களில் வழிந்த நீர் கடும் பாறையையும் உருகச் செய்யும். ஆனால் என் மனம் என்ற கல் பாறை உருகவில்லை எனென்றால் எப்பொழுதோ அதை அவளிடம் பண்டமாற்று செய்து விட்டேனே. அவள் பெற்றோர் மாப்பிளை பார்த்துள்ளத்தாக சொன்னாள். எல்லா காதலும் கல்யாணத்தில் முடிவதில்லையே என்று அவளை சமாதனம் செய்தேன்.

அன்று மாலை அதே பேருந்தில் என் பெற்றோர் பார்த்த பெண் வீட்டுக்குச் சென்றோம். எங்கள் இருவர் பெற்றோர் அளித்த காதல் பரிசு எங்கள் கல்யாண நிச்சயம் என்றும், என் காதலியின் குறும்பு விளையாட்டு தான் நேற்றும், இன்றும் நடைபெற்ற நாடகம் என்பதும் தெரிந்தது. நாங்களும் பரிசு அளித்தோம் அடுத்த வருடம் இதே பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி எங்கள் பெற்றோருக்கு எங்கள் பல்லவி( பல்லவன் திருத்தி பல்லவி என்று வைத்தோம்) மூலமாக.


பேருந்தை பற்றிய சில கவிதைகள்
------------------------------------------------------------------------
ஏழை பங்காளன் உற்ற தோழன் நீ...
சமுக விரோதிகளின் முதல் எதிரியும் நீ....
------------------------------------------------------------------------
உனக்குள் புகைப் பிடிக்க தடை...
சாலையில் புகைக் கக்க தடை இல்லை உனக்கு...
------------------------------------------------------------------------
மகளிர் மட்டும்... பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்...
------------------------------------------------------------------------
மக்களின் தரம் பார்க்காத உன்னை...
தரம் பிரித்து விட்டனர் அரசியல் வியாதிகள்...
------------------------------------------------------------------------

சங்கமம் - போட்டிக்காக


Friday, April 17, 2009

சங்கமம் - இது உங்களுக்கே நல்லா இருக்கா?


அப்பா, அம்மா சின்னப் பசங்க அழுதா, முட்டாய் வாங்கித் தரேன் இப்போ அழுகையை நிறுத்து என்று சமாதானம் செய்வது போல் கல்லூரிப் போட்டி முடிவு அறிவிச்ச உடனே, தோல்வி அடைந்தவர்களை மகிழ்ச்சியுட்டும் விதமாக "அடுத்தப் போட்டியினைப் பற்றிய அறிவிப்பு வரும் திங்கட்கிழமை அன்று எதிர்பாருங்கள்!" என்று ஒரு பிட் போட்டிங்க...

திங்கட்கிழமை பஸ் போட்டோ ஒன்னு போட்டு, "விவரம்: சித்திரை-2ம் நாள்
ஆவலுடன் காத்திருங்கள்" என்று அடுத்த பிட்டு போட்டிங்க... நானும் சித்திரை-2ம் நாள் இருந்த 10 நிமிசத்துக்கு ஒரு முறை போட்டி பக்கத்தை refresh பண்ணி பார்கிறேன், ஒன்னும் வரல :(

என்னைப் போன்ற சின்னப் பசங்களை இப்படி ஏமாற்றலாமா?.... அது தான் உங்கள் கேட்டரலாமனு இந்த இடுகையை பதிவு செய்துள்ளேன். இந்த தடவை நான் சரித்தரம் படைக்கணும் இல்ல... அது தான் கொஞ்சம் முந்திரிக் கொட்டை வேலை செய்துட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சுருங்க :).. சின்ன பையன் அறியாம செஞ்சுட்டேன். சீக்கிரம் விபரம் தாங்க... நானும் பிட்டு ரெடி பண்ணனும்.

Saturday, April 11, 2009

தேர்தலில் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி !!!!

மீண்டும் போட்டியிடுவேன்...... சரித்தரம் படைப்பேன்.

எந்த தேர்தலைப் பற்றி பேசுகிறேன் என்று குழப்பமா?
நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி இல்லை. நமது சங்கமம் வலைப்பதிவின் சார்பாக நடத்தப்பட்ட கல்லூரி என்ற தலைப்பின் கிழ் தங்கள் படைப்புகளை எழுதிய நம் வலைப்பதிவு சிங்ககள் மோதிக்கொண்ட தேர்தலைப் பற்றி சொல்கிறேன்.

இந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து சிங்ககளுக்கும் வாக்களித்த எல்லா வாக்காளப் பெருமக்களுக்கு என் முதர்க்கண் நன்றினை தெருவித்து கொள்கிறேன். இந்த தேர்தலில் நான் deposit கூட பெறவில்லை (இரண்டாம் சுற்றுக்கு கூட நான் தகுதி பெறவில்லை) என்பது வேறு விசியம். என்னுடைய படைப்பும் உங்களை கவர்ந்து அதற்கு நீங்கள் வாக்களித்து இருப்பின் என் நெஞ்சார்ந்த நன்றியினை உங்களுக்கு தெருவிக்க கடமை பட்டுள்ளேன்.

"இளங்கன்று பயம் அறியாது" என்று நான் போட்டி கட்டுரையில் கூறியதுப் போல், இந்த தோல்வியின் இருந்தும் நான் பாடம் கற்று கொண்டுள்ளேன் என்பதில் எனக்கு மிகவும் சந்தோசம். என்னைப் போன்ற இளங்கன்றுகளை ஊக்குவிக்க சங்கமம் வலைப்பதிவு மீண்டும் தயார் என்று அறிவித்துள்ளது மேலும் ஒரு பிரசாதம். "இது எல்லாம் நமக்கு புதுசா பாஸ்.... போங்க பாஸ்" என்று நாமும் அதற்கு தயாராகிவிட்டோம்.

இந்நேரத்தில் வெற்றிப்பெற்ற ”வெட்டிப்பயல்” பாலாஜி, சத்யராஜ் குமார் மற்றும் ”பினாத்தல்” சுரேஷ் அவர்களுக்கு என் சார்பாகவும், வாக்காளப் பெருமக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை பதிவுச் செய்க்கிறேன். அதேப் போல் வரும் நாடாளுமன்ற மன்ற தேர்தலிலும் அனைத்து நண்பர்களும் வாக்களித்து ஜனநாயகத்தை வெற்றிப் பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Monday, April 6, 2009

கல்வி வியாபாரத்துக்கு தடை !!!!! தேர்தல் சலுகை.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

"ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், மற்றது அனைத்தும்(பணம், புகழ்....) காலத்தால் அழியக் கூடியது " என்பது நமது வள்ளுவர் சொன்னது.

அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வாக்காளர்களை திணறடிக்கின்றனர். இத்தகைய இலவச திட்டங்கள் நம் மக்களை மேலும் சோம்பேறிகளாக்கி, அவர்கள் மூளை மழுங்கச் செய்யும் அரசியல்வாதிகளின் அறிய கண்டுபிடிப்புகள் என்பது என் கருத்து . "என் ரத்தத்தின் ரத்தமே" என்ற படத்தில் பாக்யராஜ் ஒரு நாள் உதவி செய்ய அதை நம்பி அடுத்த நாள் வேலைக்கு போகாத ரிக்க்ஷாக்காரன் கதை தான் இது ஆகும்.

இப்படித் தேவையில்லாத டி.வி இலவசம், லேப்டாப் இலவசம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுக்கின்றனர் தவிர மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தேவையான கல்வியைப் பொதுவுடமை ஆக்குவதைப் பற்றி யாரும் வாய் திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள் இந்த அரசியல்வியாதிகள். காரணம், கல்வி வியாபாரம் செய்யபவர்களிடம் கமிசன் பெறுவது மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெரும்பாலான கல்வி வியாபாரத்தளங்கள் நம் அரசியல்வாதிகளால் தானே நடத்தப்படுகிறது?.

இப்பொழுது சொல்லுங்கள் சின்ன பிள்ளைகளுக்கு ப்ளே ஸ்கூல் ஆரம்பித்து கல்லூரி படிப்பு முடிக்கும் வரை பணம் கொட்டக் கூடிய தங்க முட்டை இடும் வாத்து அல்லவா இந்த கல்வி வியாபாரம். இதை வெட்ட இவர்களுக்கு மனம் வருமா? புதிதாக கட்சி ஆரம்பித்து உள்ள விஜயகாந்த் வரை அனைவரும் கல்வி நிறுவன அதிபர்கள் தானே.

"ஒருவ‌னுக்கு மீனைப் பிடித்துக் கொடுத்தால் அவ‌னுக்கு அன்று உணவு. ஆனால், அதே ந‌ப‌ருக்கு மீன் பிடிக்க‌க் க‌ற்றுக்கொடுத்தால் வாழ் நாள் பூராவும் உண‌வு அவன் உழைப்பில்." என்று ஒரு சீன‌ ப‌ழ‌மொழி உண்டு. ஆகவே "கல்வி பொதுவுடமை" என்ற கருத்து பளுப் பெற வேண்டும், "அனைவருக்கும் கல்வி('சர்வ சிக்ஷ அபியான்')" என்ற திட்டத்தை திருத்தி அனைவருக்கும் சமச்சீரான கல்வி ( அனைத்து கல்வி நிறுவனங்களில் ஒரே வகையான கல்வி தரம்) அமைய வேண்டும் என்ற எனது ஆசையை இங்கு பதிவு செய்கிறேன். புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கும் இந்த கல்வி வியாபாரம் தடை செய்யப்பட வேண்டும்.