Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Tuesday, April 28, 2009

கருணாநிதி உண்ணாவிரதப் போராட்டமும் ஆதரவு அலையும்


இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழினத் தலைவராம், முத்தமிழ் அறிஞர், வாழும் வள்ளுவர், தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி நேற்று காலை திடீரென உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் இறங்கினார். வயதான காலத்தில் உண்ணாநோன்பிருந்து தமிழர்களுக்காக கஷ்டப்படுகிறார், நெடுங்காலமாக ஈழத்தமிழர் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஒரே தலைவர், காங்கிரஸை மிரட்டிப் பணிய வைத்தார் என்று நமது வலைதள உலகத்தில் ஆதரவு அலை விசியது. எதிர்ப்பு அலைக்கு எதிராக பார்பானியத்தை எதிர்த்த கோபம்தான் கலைஞரை திரும்பிய பக்கம் எல்லாம் தாக்குகின்றது என்றும் எழுதினார்கள்.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்காக எழுதிய நண்பர்களே நீங்களே சற்று அமைதியாக கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். அவர் நினைத்து இருந்தால் எவளவோ செய்து இருக்க முடியும், மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றிருந்தால் இலங்கையில் போர் நிறுத்தம் எப்பொழுதோ நிச்சயமாக ஏற்பட்டிருக்கும். தி.மு.க ஆதரவு இல்லாமல் மத்திய அரசை காங்கிரஸ் கட்சியால் தொடர்ந்து இருக்க முடியுமா? இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேவையும் இருந்திருக்காது.

ஆனால் அவரோ தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல், மனிதசங்கிலி போராட்டம், மன்மோகன்சிங், சோனியாகாந்திக்கு தந்தி அனுப்புவது, கடிதம் எழுவது, பொது வேலை நிறுத்தம் என்று எத்தனை எத்தனை நாடகங்கள். அவர் நாடகங்கள் என்று எழுதியதை காட்டிலும் இந்த நாடகங்களின் எண்ணிக்கை அதிகம் என்று நினைக்கிறேன். கடைசி நாடகம், தவறு தற்போதிய நாடகம் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டமும்.

மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றிருந்தால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி இலங்கை போர்நிறுத்தம் கொண்டு வந்திருக்கும். ஒருவேளை காங்கிரஸ் கட்சி இங்கு தமிழகத்திலும் ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்றால், மீண்டும் தேர்தல் சந்தித்து பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி திரும்பவும் ஆட்சி கட்டில் ஏறி இருக்கலாம். கவிஞர் தாமரை கூறியது போல், அவர் மதிப்பு மக்கள் மனதில் உயர்ந்திருக்கும்.

எனினும்
ஈழப் பிரச்னையை பொறுத்தவரை யார் அமாவாசை? என்று அவர் கூறியதில் எனக்கு உடன்பாடில்லை. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அவரின் இந்த நாடகங்களுக்கு நீங்கள் வரவேற்ப்பு தருவதா வேண்டாமா என்று?

Monday, April 6, 2009

கல்வி வியாபாரத்துக்கு தடை !!!!! தேர்தல் சலுகை.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

"ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், மற்றது அனைத்தும்(பணம், புகழ்....) காலத்தால் அழியக் கூடியது " என்பது நமது வள்ளுவர் சொன்னது.

அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வாக்காளர்களை திணறடிக்கின்றனர். இத்தகைய இலவச திட்டங்கள் நம் மக்களை மேலும் சோம்பேறிகளாக்கி, அவர்கள் மூளை மழுங்கச் செய்யும் அரசியல்வாதிகளின் அறிய கண்டுபிடிப்புகள் என்பது என் கருத்து . "என் ரத்தத்தின் ரத்தமே" என்ற படத்தில் பாக்யராஜ் ஒரு நாள் உதவி செய்ய அதை நம்பி அடுத்த நாள் வேலைக்கு போகாத ரிக்க்ஷாக்காரன் கதை தான் இது ஆகும்.

இப்படித் தேவையில்லாத டி.வி இலவசம், லேப்டாப் இலவசம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுக்கின்றனர் தவிர மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தேவையான கல்வியைப் பொதுவுடமை ஆக்குவதைப் பற்றி யாரும் வாய் திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள் இந்த அரசியல்வியாதிகள். காரணம், கல்வி வியாபாரம் செய்யபவர்களிடம் கமிசன் பெறுவது மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெரும்பாலான கல்வி வியாபாரத்தளங்கள் நம் அரசியல்வாதிகளால் தானே நடத்தப்படுகிறது?.

இப்பொழுது சொல்லுங்கள் சின்ன பிள்ளைகளுக்கு ப்ளே ஸ்கூல் ஆரம்பித்து கல்லூரி படிப்பு முடிக்கும் வரை பணம் கொட்டக் கூடிய தங்க முட்டை இடும் வாத்து அல்லவா இந்த கல்வி வியாபாரம். இதை வெட்ட இவர்களுக்கு மனம் வருமா? புதிதாக கட்சி ஆரம்பித்து உள்ள விஜயகாந்த் வரை அனைவரும் கல்வி நிறுவன அதிபர்கள் தானே.

"ஒருவ‌னுக்கு மீனைப் பிடித்துக் கொடுத்தால் அவ‌னுக்கு அன்று உணவு. ஆனால், அதே ந‌ப‌ருக்கு மீன் பிடிக்க‌க் க‌ற்றுக்கொடுத்தால் வாழ் நாள் பூராவும் உண‌வு அவன் உழைப்பில்." என்று ஒரு சீன‌ ப‌ழ‌மொழி உண்டு. ஆகவே "கல்வி பொதுவுடமை" என்ற கருத்து பளுப் பெற வேண்டும், "அனைவருக்கும் கல்வி('சர்வ சிக்ஷ அபியான்')" என்ற திட்டத்தை திருத்தி அனைவருக்கும் சமச்சீரான கல்வி ( அனைத்து கல்வி நிறுவனங்களில் ஒரே வகையான கல்வி தரம்) அமைய வேண்டும் என்ற எனது ஆசையை இங்கு பதிவு செய்கிறேன். புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கும் இந்த கல்வி வியாபாரம் தடை செய்யப்பட வேண்டும்.