தமிழ் பதிவுலகம், தமிழ் பத்திரிக்கையுலகம் மற்றும் தமிழ் தொலைக்காட்சிகள் கடந்த இரண்டு, முன்று தினங்களில் மிக முக்கியமாக ஒரு செய்தியை அலசி ஆராய்ந்து கொண்டுருக்கும் பொழுது எனக்கு ஏனோ இந்த இடுகை உங்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றியது. சுட சுட அலசி ஆராயப்பட்டு கொண்டு இருக்கும் செய்தியுடன் தொடர்பு உண்டா என்பதை இந்த இடுகையை படித்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
நம் பதிவுலக நண்பர்கள் இந்த செய்தியை பயன்படுத்தி தொலைக்காட்சிகள் தங்கள் டீ.ஆர்.பி க்கும், பத்திரிகையுலகம் தங்கள் வியாபாரத்துக்கும் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டுகிறோம். ஆனால் நாமும் நம்முடைய வலைதளத்தின் டீ.ஆர்.பி உயர்வுக்கு பயன்படுத்துகிறோம் என்பதை மறுக்க முடியாது.
அவர்கள் செய்வது பொறுப்பற்ற செயல் என்று விமர்சிக்கும் நாம் அதை பற்றி பேசி அதை இன்னும் பிரபலப்படுத்த கூடாது என்பதே என் கருத்து. இந்த உலகை உலுக்கி கொண்டிருக்கும் பல பிரச்சினைகளுக்கு உங்கள் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் தேவைபடுகின்றன. கடந்த கால் நூற்றாண்டில் பல இயற்கை பேரழிவுகளை இந்த உலகம் கண்டுள்ளது.
கொதிக்கும் கோடைக் காலங்கள், கடல் மட்ட அதிகரிப்பு, மழை பொழிவு தன்மைகளிலான மாற்றங்கள், வறட்சி மற்றும் பூகம்பம், பேரழிவு ஆழிப்பேரலை இப்படி இந்த உலகம் எத்தனையோ சந்தித்து கொண்டு இருக்கிறது. இவை அனைத்துக்கும் மூலகாரணம் என்று பார்த்தால் உலக தட்ப வெப்ப நிலை மாற்றமே. அதற்கு வழிவகுத்து நம் மனிதர்களின் சுக போக வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக விளங்கும் தொழில் புரட்சியே ஆகும்.
இவைகளுக்கு எல்லாம் விதையாக இருந்த கண்டுபிடுப்புகளை நம் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்காமலே இருந்து இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. நம் பதிவுலகும் இப்பொழுது அலசி ஆராய்ந்து கொண்டு இருக்கும் நிகழ்வுகள் பற்றி தெரிந்திருக்க கூட வாய்ப்பு கிடைத்திருக்காது.
இதை பார்க்கும் பொழுது எப்பொழுதோ வலைபதிவில் படித்தது நியாபகம் வந்தது. "சல்லடையில் சல்லிக்கும்போது மாவு கீழே விழும், சக்கைகள் சல்லடையில் தங்கிவிடும். முறத்தில் புடைக்கும்போது சக்கை கீழே விழுந்து விடும். அரிசி முறத்தில் தங்கி விடும். நாம் சல்லடை போல் தேவையற்றவைகளை வைத்துக்கொள்ளாமல், முறம் போல் நல்லதை மட்டும் வைத்துக்கொண்டு தேவை இல்லாதவகைகளை விட்டு விட வேண்டும்"
நம் பதிவுலகின் சேவை பலவற்றில் தேவை. ஆகவே அதற்க்கு அனைவரும் முயற்சி செய்ய இந்த இடுகை முலம் கேட்டு கொள்கிறேன்.