இலங்கையில் அந்நாட்டு அரசு போர் நிறுத்தம் செய்யாமல், தொடர்ந்து தாக்குதல் நடத்துவதைப் பற்றி நம் இந்திய மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முதல் சாதரண பொதுமக்கள் வரை இரண்டு வகையானக் கருத்துக்கள் நிலவுகிறது. சிலர் வரவேற்றும், சிலர் எதுர்த்தும் குரல் கொடுக்கின்றனர். அதில் இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கை தவறில்லை என்பது மட்டுமின்றி, காஷ்மீர் தனிநாடு கேட்டு போராடுபவர்களை எதிர்த்து நமது இராணுவம் போராடுவதை போல், இலங்கை ராணுவமும் போரிடுகிறது என்று கூறுபவர்களுடைய கருத்தில் உள்ள நியாய, அநியாங்களைப் பற்றி நாம் இப்பொழுது அலசி ஆராய்வோம்.
காஷ்மீர் தனிநாடு கேட்டு ஆயுதம் ஏந்தியவர்களை நம் அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்குவது தவறா?. நூற்றுக்கு நூறு இதில் தவறு ஏதும் இல்லை என்று தீவிரவாதிகள் மூலம் மூளைச்சலவைச் செய்யப்படாத எந்த ஒரு இந்திய குடிமகனின் பதிலாக மட்டுமின்றி இந்த உலகில் வாழும் நல்ல இதயம் படைத்த மக்களின் கருத்தாக இருக்கும். இதேப் போன்ற ஒரு அணுகுமுறையை தானே இலங்கை அரசும் மேற்கொள்கிறது. இதை நாங்கள் ஆதரிப்பது தவறா?. இது தான் அவர்கள் கேள்வி.
இலங்கைப் போர் என்ற இந்த விதை இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுதே விதைக்கப்பட்டது. இலங்கை சொந்தமண்ணாக கொண்ட தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது, தனிச் சிங்களச் சட்டம்(தற்ப்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), பெளத்தம் அரச சமயம் ஆக முதன்மைப்படுத்தப்படல் போன்ற பல்வேறு இனப்பாகுபாட்டினை தூண்டும் செயல்கள், அந்த விதை இன்று ஆலமரமாக எழும்ப காரணமாகி விட்டன.
காஷ்மீர் போராட்டமும் இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுதே ஆரம்பித்தது தான் என்றாலும், இந்தியா அங்கு அமைதி ஏற்படுத்தி, மக்கள் வாழ்க்கைத் தரம் முன்னேற பல முயற்ச்சிகள் மேற்கொண்டு உள்ளது. அங்கு மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் தீய சக்திகளை எதிராக இந்தியா போராடி வருகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் 370ஆம் பிரிவின்படி, ஜம்மு-காஷ்மீருக்குத் தன்னாட்சி உரிமையும் சிறப்பு அந்தஸ்தும் வழங்கப்பட்டன. 2007ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி பிரான்சில் நடைப்பெற்ற ஐரோப்பிய மக்கள் பிரதிநிதிகள் சபை கூட்டத்தில், அதன் பிரிட்டிஷ் பிரதிநிதியான எம்மா நிக்கல்சன் காஷ்மிரின் இரு பகுதிகளிலும் (பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்ப்பட)சுற்றுப்பயணம் மேற்கொண்டு தாக்கல் செய்திருந்த அறிக்கை பெருவாரியான பிரதிநிதிகளின் ஆதரவுடன் நிறைவேற்றியது.அதில் உள்ள சில முக்கிய கருத்துகள் இதோ "பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளதை விட அனைத்து விதங்களிலும் இந்திய காஷ்மீரில் மனித உரிமைகளும், மக்கள் வாழ்க்கை தரமும் அவர்களுக்கு அளிக்கப்படும் அடிப்படை உரிமைகளும் நன்றாக உள்ளது. பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமைகளே இல்லை.அவர்கள் சமமான குடிமக்களாக நடத்தப்படுவதில்லை. ஜனநாயகமும் இல்லை. பாகிஸ்தானிய பாராளுமன்றத்தில் அவர்களுக்கு பிரதிநிதித்துவமும் இல்லை."
இலங்கையில் மக்கள் சம உரிமைக் கோரி அறவழியில் போராடிய போது அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு அறப்போராட்டத்தை ஒடுக்கியது. அதில் பலியானோர் எண்ணிக்கை பல்லாயிரம். தங்கள் சுயமரியாதை பாதிக்கப்பட்டு, எண்ணற்ற தங்கள் சொந்தங்கள் இறப்பதைக் கண்டு ஆயுதம் ஏந்தி போராட ஆரம்பித்தனர். அவர்களை ஒடுக்குவதாகக் கூறி விமானப்படைத் தாக்குதல் சிங்கள ராணுவத்தினர் நடத்தினர், நடத்திக் கொண்டும் இருக்கின்றனர். இதில் அங்கு வாழும் அப்பாவி மக்கள் பெருமளவில் மடிவார்கள் என்று இவர்களுக்கு தெரியாதா? அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு மண்டல பகுதியில் தங்கியிருந்த அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் தொடர்ந்து சரமாரியாக பீரங்கி மற்றும் ஏவுகனை தாக்குதல் நடத்தியது எவ்வகையில் சரி? யுத்தத்தில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை நியதிகளைக் கூட காற்றில் பறக்க விட்டு, மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், சிறார் இல்லங்கள், குடியிருப்புகள் என குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்தியா, காஷ்மீரில் தீவிரவாதிகளை அடக்குவதாகக் கூறி என்றைக்கும் விமானப்படைத் தாக்குதல் நடத்தியது இல்லை.
மேலே குறிப்பிட்டதுப் போல், நமது இந்திய அரசு தீவிரவாதத்தைய இரும்புக்கரம் கொண்டு அடக்க முனைவது உண்மை எனினும், நம் நாட்டில் எவரையும் இன ரீதியாக ஒடுக்க தற்சமயம் இந்தியாவை ஆண்ட எந்த அரசும் முனையவில்லை. இதற்கு சான்றாக நமது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் 2008 அக்டோபர் 13ஆம் தேதி புதுடில்லியில் நடைப்பெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் பேசியதின் சில கருத்துகள் இதோ "மதத்தின் பெயரில் கலவரங்களை, வன்முறைகளை தூண்டி விடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதேநேரத்தில் இரு தரப்புக்கும் இடையே நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். இதில் சமரசத்துக்கே இடமில்லை. அதேநேரத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தவறான முறைகளைப் பின்பற்றக் கூடாது. குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிரான நடவடிக்கையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான எண்ணத்தையோ ஏற்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது" என்றார்.
இவை அனைத்துக்கும் மேலாக இந்தியாவில் வாழும் நாம் அனைவரும் காஷ்மீர் மக்களை நம்மில் ஒருவராக தான் பார்க்கின்றோம். ஆனால் இலங்கை வாழும் தமிழர்களை பிறநாட்டைய சேர்ந்தவர்களைப் போல் பாவிக்கின்றனர். சிலர் அவர்களை மனிதர்களாகக் கூட மதிப்பது இல்லை.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சரியாகாது என்பது தான் நம் அனைவருடைய கருத்தும். அரசியல் தீர்வு மட்டுமே இலங்கை வாழ் தமிழ் மக்களின் உயிரையும், உரிமையும் பாதுக்காக்க முடியும். இலங்கையில் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை, சம வாய்ப்பு என்ற நமது ஆசை வெறும் பகல்கனவாக இருந்துவிடாமல் நிறைவேறி அங்கு கூடியவிரைவில் அமைதி திரும்ப நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோமாக.
கடந்த தேர்தலை விட மக்கள் கணிசமான அளவில் வாக்களித்து காஷ்மீரில் புதிதாக அமைந்துள்ள அரசு, இந்தியாவின் பிறப்பகுதிகளில் உள்ளது போலான வாழ்கை முறையினை அங்கு கொண்டு வரவேண்டும். அதற்கு தேவையான அடிப்படை வசதி, வேலைவாய்ப்பு, கல்வி முதலியப்பற்றில் கவனம் செலுத்தி, ஊரடங்கு உத்தரவு, குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி வளைத்துத் தாக்குவது, சோதனைச் சாவடிகள் போன்றவற்றை குறைத்து, ''ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்'' முழுமையாக நீக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ வைக்க வேண்டும். இதன் முலம் காஷ்மீர் மக்களின் நம்பிக்கைப் பெற்று, அவர்களை உணர்வுபூர்வமாக தீவிரவாதிகளை எதிர்க்க வைத்தால் மட்டுமே, நாட்டின் மத நல்லிணக்கம், ஒருமைப்பாடு மற்றும் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத அமைப்புகளை முழுமையாக ஒடுக்க இயலும்.
காஷ்மீர் ஆயுதப்போராட்டமும், இலங்கைப் போரும் வேறுபட்டதா? என்ற கேள்விக்கான விடையை இப்பொழுது நீங்களே இந்த இடுகையின் பின்னோட்டத்தில் கூறுங்கள்.